மொகாலி: ஐபிஎல் தொடரில் இன்று (ஏப்ரல் 28) நடைபெறும் 38வது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் லக்னோ அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. நடப்பு சீசனில் இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள பஞ்சாப் அணி 4 வெற்றி, 3 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ளது. கடந்த 22ம் தேதி மும்பை அணியுடன் மோதிய பஞ்சாப், 13 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
தவான் ரிட்டர்ன்ஸ்?: தோள்பட்டை காயம் காரணமாக கடந்த 3 போட்டிகளில் பங்கேற்காத பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவான் இன்றைய ஆட்டத்தில் விளையாடுவார் என எதிர்பார்க்கலாம். பிரப்சிம்ரன், தைடே, ஹர்ப்ரீத் சிங் பேட்டிங்கில் வலுசேர்க்கின்றனர். ஆல்ரவுண்டர் சாம் கரனின் பங்களிப்பு அணிக்கு கூடுதல் பலம். மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் அவர் 29 பந்துகளில் 55 ரன்களை குவித்தார். விக்கெட் கீப்பர் ஜிதேஷ் ஷர்மாவும் பேட்டிங்கில் அசத்துகிறார்.
மிரட்டும் பந்துவீச்சு: பந்துவீச்சிலும் பஞ்சாப் அணி மிரட்டுகிறது. மும்பைக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், அர்ஷ்தீப் சிங் டெத் ஓவர்களை சிறப்பாக வீசினார். 4 ஓவர்களில் 29 ரன்களை விட்டுக்கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். அவர் வீசிய 2 பந்துகளில், 2 ஸ்டம்புகள் உடைந்தன. சாம் கரன், நேதன் எல்லீஸூம் பந்துவீச்சில் வலுசேர்க்கின்றனர். ரபாடா இன்றைய ஆட்டத்தில் களம் இறக்கப்படலாம். இதற்கெல்லாம் மேலாக சொந்த மண்ணில் பஞ்சாப் அணி களம் இறங்குவது அந்த அணிக்கு கூடுதல் பலம் தான்.
சொதப்பும் மிடில் ஆர்டர்: இதேபோல் 7 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னோ அணி 4 வெற்றி, 3 தோல்வியுடன் 8 புள்ளிகளை பெற்று, புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது. கேப்டன் கே.எல்.ராகுல் அதிரடியாக விளையாட தவறுகிறார். அதேநேரம் பொறுமையாக விளையாடி, அணி கவுரவமான ஸ்கோரை எட்ட உதவுவதும் அவர்தான். கைல் மேயர்ஸ், குருணல் பாண்ட்யா ஆறுதல் தருகின்றனர். நிகோலஸ் பூரன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.