ஹைதராபாத்: ஐபிஎல் தொடரின் முதல் லீக் ஆட்டம் 2008ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி நடைபெற்றது. இந்நிலையில் நடப்பு சீசனில் இன்று (ஏப்ரல் 30) நடைபெறும் 42வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. இது ஐபிஎல் வரலாற்றில் 1000-ஆமாவது போட்டி. இதற்காக பிசிசிஐ சார்பில் சிறிய விழா நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழாவில் இரு அணி கேப்டன்களுக்கும் நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.
முன்னேறுமா மும்பை?:மும்பை இந்தியன்ஸ் அணியைப் பொறுத்தவரை 7 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி, 4 தோல்விகளுடன் புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில், மும்பை அணி 55 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இதனால் அந்த அணி மீண்டு வர வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. கடந்த போட்டியில் தொடக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மா 2 ரன்கள், இஷான் கிஷன் 13 ரன்களில் ஆட்டமிழந்தனர். இருவரும் நல்ல தொடக்கத்தைத் தர வேண்டியது அவசியம். கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், நேஹல் வதேரா நம்பிக்கை அளிக்கின்றனர். ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களும் உரிய பங்களிப்பை அளித்தால் மட்டுமே, ராஜஸ்தான் அணிக்கு எதிராக நல்ல ஸ்கோரை எட்ட முடியும்.
பந்துவீச்சில் கடந்த ஆட்டத்தில் விளையாடாத, ஜோஃப்ரா ஆர்ச்சர் இன்றைய ஆட்டத்தில் பங்கேற்பார் என எதிர்பார்க்கலாம். சுழற்பந்து வீச்சாளர் பியூஷ் சாவ்லா நம்பிக்கை அளிக்கிறார். குஜராத் அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் 2 ஓவர்கள் வீசி 9 ரன்களை விட்டுக்கொடுத்த அர்ஜூன் டெண்டுல்கர் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார். அவருக்கு டெத் ஓவர்களை வீச வாய்ப்பு அளிக்கலாம். கேப்டன் ரோஹித் இன்று 36வது பிறந்தநாளை கொண்டாடும் நிலையில், இப்போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
அதேநேரம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பலமாக உள்ளது. சென்னை அணிக்கு எதிரான கடந்த ஆட்டத்தில் தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 43 பந்துகளில் 77 ரன்களைக் குவித்தார். ஜோஸ் பட்லர், கேப்டன் சாம்சன், ஹெட்மேயர், ஜூரேல், படிக்கல் ஆகியோர் வலுசேர்க்கின்றனர். பந்துவீச்சில் போல்ட், அஸ்வின், ஹோல்டர், சந்தீப் சர்மா சிறப்பான பங்களிப்பை அளிக்கின்றனர்.
மும்பை உத்தேச அணி: ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, டிம் டேவிட், நேகல் வதேரா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, அர்ஜூன் டெண்டுல்கர், குமார் கார்த்திகேயா, ஜேசன் பெஹ்ரென்டார்ஃப்.
ராஜஸ்தான் உத்தேச அணி: யாஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன் (கேப்டன்), படிக்கல், ஹெட்மேயர், ஜூரெல், அஸ்வின், ஹோல்டர், போல்ட், சந்தீப் சர்மா, சாஹல், குல்தீப் யாதவ்.