பெங்களூரு: கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் மிக ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கும் 17வது ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் இன்னும் சில மாதங்களில் தொடங்க உள்ளது. சமீபத்தில் இதற்கான டிரேட் முறை நடந்து முடிந்தது. மேலும், வரும் டிசம்பர் 19ஆம் தேதி 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் துபாயில் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
ஐபிஎல் 2024 தொடருக்கான தற்போதைய ஊடக உரிமம் 2022ஆம் ஆண்டு முதல் ஐந்தாண்டிற்கு 6.2 பில்லியன் அமெரிக்க டாலராக அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட 48 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஏலம் போனது. இது சர்வதேச கால்பந்து லீக்கிற்கு அடுத்த படியாக உள்ளது. இந்த நிலையில், ஐபிஎல் ஊடக உரிமம் அடுத்த 20 ஆண்டுகளில் 50 பில்லியன் அமெரிக்க டாலரை எட்டும் என இந்தியன் பிரிமியர் லீக்கின் தலைவர் அருண் துமால் கூறியுள்ளார்.