துபாய்: 17வது ஐபிஎல் சீசன் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஏற்கனவே ஒவ்வொரு அணி வீரர்களை தக்கவைத்துக் கொள்வதும், விடுவிப்பதும் மற்றும் வீரர்களை பரிமாற்றம் செய்து கொள்வது என்ற டிரேட் முறை சில வாரங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது.
குறிப்பாக, இதில் குஜராத் டைட்டன்ஸ் அணியை கடந்த 2 சீசன்களாக வழிநடத்தி வந்த ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கும், மும்பை அணியில் இருந்த கேமரூன் கிரீன் பெங்களூரு அணிக்கும் தாவிக் கொண்டனர் என்பது குறிபிடத்தக்க அம்சமாகும். இதனைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை அணி நிர்வாகம் கேப்டன் பதவியைக் கொடுத்தது.
இந்த நிலையில், இன்று (டிச.19) துபாயில் உள்ள பிரபல வணிக வளாகத்தில் 2024 ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்திய நேரப்படி, இந்த ஏலம் மதியம் 1 மணிக்கு தொடங்கியது. இந்த நிலையில், உத்தரப் பிரதேச கிரிக்கெட் வீரரான சமீர் ரிஸ்வியை, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கி உள்ளது.
20 லட்சத்தில் தொடங்கிய ஏலத்தில், சமீர் ரிஸ்வியை கைப்பற்ற டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8.40 கோடிக்கு வாங்கியது.