துபாய் :17வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி 2024ஆம் ஆண்டு மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை (டிச. 19) துபாயில் நடைபெற உள்ளது. முதல் முறையாக ஐபிஎல் ஏலம் இந்தியாவில் இல்லாமல் வெளிநாட்டில் நடக்க இருப்பது குறிப்பிடத்தக்கது.
ஏலத்தில் வீரர்களை வாங்க அதிகபட்சமாக குஜராத் டைட்டன்ஸ் அணி 38 கோடியே 15 லட்ச ரூபாய் கையிருப்பு உள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 31 கோடியே 4 லட்ச ரூபாய் கையிருப்பு கொண்டு உள்ளது. அதேபோல் குறைந்தபட்சமாக லக்னோ அணியிடம் 13 கோடியே 15 லட்ச ரூபாய் கையிருப்பு உள்ளது உள்ளது.
அதுமட்டுமல்லாமல் ஐபிஎல் ஏலம் வரலாற்றில் முதல் முறையாக ஏலத்தை பெண் ஒருவர் நடத்த உள்ளார். மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான ஏலத்தை நடத்திய மல்லிகா சாகர் இதனை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. நாளை (டிச. 18) இந்திய நேரப்படி மதியம் 1 மணிக்கு வீரர்களுக்கான மினி ஏலம் தொடங்க உள்ளது.
ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டு வீர்ர்கள் என்று மொத்தம் 333 வீரர்கள் இடம் பிடித்து இருப்பதாக ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்து உள்ளது. இவர்களில் 116 வீரர்கள் சர்வதேச போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. ஏலத்தில் 30 வெளிநாட்டவர் உள்பட மொத்தம் 77 வீரர்கள் 10 அணிகளுக்காக எடுக்கப்பட உள்ளனர்.