ஹைதராபாத்: 16வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று (ஏப்ரல் 1) இரவு நடைபெறும் 3வது லீக் ஆட்டத்தில், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. அண்மையில் கார் விபத்தில் படுகாயம் அடைந்த டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், வேகமாக குணமடைந்து வருகிறார். எனினும், காலில் ஏற்பட்டுள்ள காயம் காரணமாக அவர் நடப்பு சீசனில் இடம்பெறவில்லை. இதனால் டெல்லி அணியை வழிநடத்தும் பொறுப்பு, ஆஸ்திரேலிய அணியின் அதிரடி வீரர் டேவிட் வார்னரிடம் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஐபிஎல் சீசனில், ரிஷப் பண்ட் தலைமையில் களம் இறங்கிய டெல்லி அணி 7 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் 5வது இடத்தை பிடித்தது. டெல்லி அணியை பொறுத்தவரை டேவிட் வார்னர், பிரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரசோவ், மணீஷ் பாண்டே ஆகிய அதிரடி வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். எனினும் அந்த அணியில் ரிஷப் பண்ட் இல்லாததால், மிடில் ஆர்டர் வரிசை, சற்று வலு குறைவாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. பந்து வீச்சை பொறுத்தவரை அன்ரிச் நாட்ர்ஜே, முஸ்டாஃபிசுர் ரஹ்மான், குல்தீப் யாதவ், அக்சர் படேல் ஆகியோர் சிறப்பாக பந்து வீசினால், லக்னோ அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம்.
விக்கெட் கீப்பர் யார்?: நடப்பு சீசனில் ரிஷப் பண்ட் விளையாடாததால், டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் பொறுப்பு யாருக்கும் வழங்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது. பண்ட்-க்கு பதிலாக அபிஷேக் போரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பெங்கால் அணியின் விக்கெட் கீப்பர் ஆவார். எனினும் இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா என தெரியவில்லை. எனவே இன்றைய ஆட்டத்தில் சர்ஃபராஸ் கான் விக்கெட் கீப்பராக களம் இறக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. சையது முஸ்தாக் அலி டிராபியில் அவர் விக்கெட் கீப்பராக செயல்பட்டுள்ளதால், அந்த அனுபவம் நிச்சயம் உதவியாக இருக்கும் என கருதப்படுகிறது. அதேநேரம் மணீஷ் பாண்டே, பில் சால்ட் ஆகியோரது பெயர்களும் விக்கெட் கீப்பர் பொறுப்புக்கு பரிசீலனையில் உள்ளதாக டெல்லி அணி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
'பொறுமையாக வாங்க': "கார் விபத்தில் காயம் அடைந்த ரிஷப் பண்ட் மெல்ல குணமடைந்து வருகிறார். அவரால் முடிந்தவரை எங்களுக்கு உதவி செய்வார் என நம்புகிறோம். அவசரம் இல்லாமல், அவர் பூரணமாக குணமடைய நாங்கள் விரும்புகிறோம். எங்கள் அணியில் திறமைவாய்ந்த இளம் வீரர்கள் உள்ளனர். அனைவரது ஆதரவும் எங்களுக்கு உள்ளது" என டெல்லி அணியின் கேப்டன் டேவிட் வார்னர் கூறியுள்ளார்.
லக்னோ அணி எப்படி?: பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்படும் லக்னோ ஜெயண்ட்ஸ் முதல் முறையாக உள்ளூரில் களம் இறங்குகிறது. கடந்த சீசனில் அறிமுக தொடரிலேயே 4வது இடத்தை பிடித்த லக்னோ அணி, டெல்லி அணிக்கு எதிரான 2 லீக் ஆட்டங்களில் வெற்றி பெற்று அதிர்ச்சி அளித்தது. வழக்கமாக தொடக்க ஆட்டக்காரராக களம் இறங்கும் குயின்டான் டி காக், சர்வதேச போட்டியில் விளையாடி வருவதால், இன்று நடைபெறும் ஆட்டத்தில் அவர் இடம்பெறவில்லை. அதனால் கேப்டன் கே.எல்.ராகுலுடன், மேற்கிந்திய தீவுகள் வீரர் கைல் மேயர்ஸ் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.