டெல்லி:உலக கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் ஐபிஎல் 2023ஆம் ஆண்டு தொடருக்காக காத்துக்கொண்டிருக்கின்றனர். ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 16ஆவது சீசன் 2023ஆம் ஆண்டு மார்ச் 25 முதல் மே 28 வரை நடைபெற உள்ளது. அதில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் களம் காண உள்ளன.
இதற்கான வீரர்கள் ஏலம் முன்னதாக மெகா ஏலமாக நடத்தப்பட்டது. இந்த நிலையில், நடப்பாண்டில் மினி ஏலமாக நடத்தப்படுகிறது. இந்த மினி ஏலம் இன்று (டிச.23) மதியம் 2.30 மணிக்கு கேரள மாநிலம் கொச்சியில் உள்ள கிராண்ட் ஹயாத் ஹோட்டலில் வைத்து நடைபெற உள்ளது.
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஏலத்தில் 273 இந்திய வீரர்கள் மற்றும் 132 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 991 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களில் 405 பேர் இறுதிப் பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். அணிகளுக்கு 87 இடங்கள் மட்டுமே உள்ளன. மொத்தம் ரூ.183.15 கோடி வரை செலவழிக்க முடியும்.
முன்னணியில் உள்ள வீரர்கள்: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரூ.42.25 கோடி மற்றும் 17 இடங்களை நிரப்ப ஏலத்தில் நுழையும். அதேநேரம் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ரூ.8.75 கோடி மற்றும் 9 இடங்களை நிரப்ப உள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.7.05 கோடியை வைத்திருப்பதால், இன்னும் 14 இடங்கள் நிரப்பப்பட வேண்டிய நிலையில் உள்ளது.
இந்த முறை ஐபிஎல் 2023 மினி ஏலத்தில் கேன் வில்லியம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட், மயங்க் அகர்வால், சாம் கரண், சிக்கந்தர் ராசா, ஜோடான் ஆகிய வீரர்கள் அதிக ஏலத்தில் எடுக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.