சென்னை: 'ஐபிஎல் 2023' தொடரின் 55-ஆவது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்றது. இதில், சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து சென்னை அணியின் தொடக்க வீரர்களாக ருதுராஜ் மற்றும் டெவன் கான்வே ஆகியோர் களமிறக்கினர். இந்த ஜோடியில் டெவன் 10 ரன்னிலும், ருதுராஜ் 24 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த மொயின் அலி 7 ரன்னிலும், ரகானே 21 ரன்னிலும் ஆட்டமிழந்து சிஎஸ்கே வீரர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினர். அதன் பின்னர் களமிறங்கிய ஷிவம் துபே, அம்பதி ராயுடு நிதானமாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். ஷிவம் துபே 12 பந்துகளில் 3 சிக்சர்களுடன் 25 ரன்களில் அவுட் ஆனார். அம்பத்தி ராயுடு 17 பந்துகளில் 23 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றம் அளித்தார். இதனால், சென்னை 16.2 ஓவரில் 6 விக்கெட் இழந்து 126 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தது.
அதன் பின்னர் வந்த ஜடேஜா மற்றும் கேப்டன் மகேந்திர சிங் டோனி கடைசி இறுதிக்கட்டத்தில் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதில் ஜடேஜா 16 பந்துகளில் 21 ரன்கள் எடுத்து அவுட் ஆக, பின்னர் 9 பந்துகளில் 2 சிக்ஸர், 1 பவுண்டரி உட்பட 20 ரன்களை எடுத்து அசத்தினார். ஆனாலும் கடைசி பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். இதனால் சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 167 ரன்களை எடுத்தது.