மும்பை:கரோனா தொற்றுப் பரவல் காரணமாக ஐபிஎல் 2021 தொடர் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடருக்கான எதிர்பார்ப்புகள் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளன. ஏனென்றால், பிசிசிஐ (இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம்) 2022ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரில் இரண்டு புதிய அணிகளை சேர்க்க முன்வந்துள்ளது.
அதன்படி அடுத்தாண்டு ஐபிஎல் ஆட்டத்தில் மொத்தம் பத்து அணிகள் இடம்பெறவிருக்கிறது.
புதிய அணிகளில் குஜராத், உத்தரப் பிரதேச மாநிலங்களின் அணிகள் களமிறங்கலாம் என்று தகவல்கள் வெளியாகிவருகின்றன. இருப்பினும், புதிய அணிகள் எந்த மாநிலத்தை அடிப்படையாகக் கொண்டு களமிறங்கப் போகின்றன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாகத் தகவல் வெளியாகவில்லை.
ஐபிஎல் புதிய அணிகளுக்கான ஏலம்
இந்தப் புதிய அணிகளுக்கான ஏல அழைப்பினை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. அந்தவகையில், ஆரம்பத்தொகையை ரூ.2000 கோடியாக பிசிசிஐ நிர்ணயித்துள்ளது. அத்துடன் ஏலம் எடுக்கும் நிறுவனங்களின் தகுதி, விதிமுறைகள், கட்டுப்பாடுகள் குறித்த நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன.
அதில் ஏலம் கோரும் நிறுவனங்கள், தொழிலதிபர்கள் முன்பணமாக ரூ. 10 லட்சம் கட்டவேண்டும். இந்தத் தொகை திரும்ப அளிக்கப்படாது.