கரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், ஐக்கிய அரபு அமீரகத்திக்கு மாற்றியமைக்கப்பட்டது. இந்நிலையில் ஐபிஎல் தொடரைப் போன்றே இந்தியாவில் நடைபெறும் மகளிருக்கான வுமன்ஸ் டி20 சேலஞ்ச் (Women's T20 Challenge) தொடருக்கான இடம், தேதி, அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து பிசிசிஐ வெளியிட்டுள்ள அறிவிப்பில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்தாண்டுக்கான வுமன்ஸ் டி20 சேலஞ்ச் போட்டிகள் நவம்பர் 4ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும். மேலும் இந்த சீசனுக்கான போட்டிகள் அனைத்து சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடத்தப்படவுள்ளது.
சூப்பர்நோவாஸ், டிரையல்பிளேஸர்ஸ், வெலாசிட்டி ஆகிய மூன்று அணிகள் பங்கேற்கும் இத்தொடரில், இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த வீராங்கனைகளும் பங்கேற்கவுள்ளனர்.
அதேசமயம் நவ.04 ஆம் தேதி நடைபெறவுள்ள சீசனின் தொடக்கப் போட்டியில் நடப்பு சம்பியன் சூப்பர்நோவாஸ் அணி, வெலாசிட்டி அணியுடன் பலப்பரீட்சை நடத்தும் என்றும் தெரிவித்துள்ளது.