மகளிர் டி20 சேலஞ்ச் தொடரின் முதல் போட்டியில் வெலாசிட்டி அணியிடம் தோல்வியடைந்த சூப்பர்நோவாஸ் அணி, அடுத்தப் போட்டியில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
இதனால் ஏற்கனவே 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் வென்ற சூப்பர்நோவாஸ் அணி மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ளது. அந்த அணியின் பேட்டிங் பெரும்பாலும் சமாரி அட்டப்பட்டு, ஹர்மன்ப்ரீத் கவுர், ப்ரியா புனியா ஆகியோரை நம்பியே உள்ளதால், இவர்களின் ஆட்டம் முக்கியமானது.
மறுமுனையில் ட்ரையல்ப்ளேசர்ஸ் அணியைப் பொறுத்தவரையில் ஸ்மிருதி மந்தனா, ரிச்சார் கோஷ், ஹர்லின் டியோல் ஆகியோர் தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் பந்துவீச்சிலும் எக்லெஸ்டோன், அயபோங்கா, ஷகீரா ஆகிய வெளிநாட்டு வீராங்கனைகள் சிறப்பாக வீசுவதால், முதல் முறையாக மகளிர் டி20 சாம்பியன் பட்டத்தை ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி கைப்பற்றும் என கூறப்படுகிறது.
இறுதிப்போட்டியில் ஆடுவது பற்றி சூப்பர்நோவாஸ் அணியின் துணை கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் கூறுகையில், '' எங்கள் அணியில் அனைவரும் பாசிட்டிவாக இருக்கிறோம். அதனால் நிச்சயம் மூன்றாம் முறையாக கோப்பையைக் கைப்பற்றுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. எங்கள் பந்துவீச்சாளர்கள் முழுமையான திறனை வெளிப்படுத்துவார்கள் என நினைக்கிறேன். எங்கள் திட்டத்தை முழுமையாக செயல்படுத்த விரும்புகிறோம்'' என்றார்.