ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், அடுத்ததாக இலங்கை கிரிக்கெட் வாரியம் சார்பாக லங்கா ப்ரீமியர் லீக் தொடர் நடக்கவுள்ளது. அதில் கல்லி கிளாடியேட்டர்ஸ் அணியின் பயிற்சியாளராக வாசிம் அக்ரம் செயல்படவுள்ளார்.
இது குறித்து வாசிம் அக்ரம் கூறுகையில், ''டி20 லீக் தொடர்கள் உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள கிரிக்கெட் வீரர்களை அடையாளப்படுத்த உதவிவருகிறது. அதேபோல் டி20 வகை போட்டிகள் வேகமாக உள்ளதால் இளைஞர்களைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது.
பேட்ஸ்மேன்களின் ஸ்ட்ரைக் ரேட் உயர்ந்துள்ளது, பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து புதிய யுக்திகளைக் கண்டறிகின்றனர், ஃபீல்டிங்கின் தரம் உயர்ந்துள்ளது.
டி20 வகையான போட்டிகளின் அதிகரிப்பால், டெஸ்ட் போட்டிகளிலும் தற்போது முடிவுகள் அதிகரித்துவருகிறது. உலகில் உள்ள அனைத்துப் பகுதிகளிலும் டி20 கிரிக்கெட் லீக்குகள் நடப்பதால், கிரிக்கெட்டின் வளர்ச்சி நாளுக்கு நாள் அதிகரிக்கிறது.
கோவிட்-19 காரணமாக உலகில் உள்ள 90 விழுக்காடு விளையாட்டுகள் ரத்துசெய்யப்பட்டன. அதனால் விளையாட்டைப் பார்ப்பதற்கே மக்களிடையே பெரும் பசி இருந்தது. அதனை ஐபிஎல் தொடர் சரியாகப் பயன்படுத்தியுள்ளது. முதல் போட்டியை 20 கோடி பார்த்துள்ளனர். உலகில் வேறு எந்த விளையாட்டிற்கும் இதுபோன்று பார்வையாளர்கள் இருந்ததில்லை.
ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்களும், பிஎஸ்எல் தொடரில் இந்திய வீரர்களும் பங்கேற்க வேண்டும். எப்போதும் விளையாட்டை அரசியலாகப் பார்க்கக் கூடாது. ஆனால் இது அரசு தொடர்பான விஷயம் என்பதால் நான் கருத்து கூறுவதற்கு எதுவும் இல்லை.
பாகிஸ்தான் கிரிக்கெட்டில் பாபர் அஸாம் மிகவும் தனித்துவமானவர். விராட் கோலியுடன் ஒப்பிட விரும்பவில்லை. அனைத்துவிதமான போட்டிகளிலும் அவர் திறமையை வெளிப்படுத்தியுள்ளார். விராட் கோலியைப்போல் அவர் கன்சிஸ்டென்ட்டாக ஆட வேண்டும்'' என்றார்.
இதையும் படிங்க:புள்ளிகள், ரன் ரேட் இரண்டிலும் ஒரே நிலையில் இருந்தால், எப்ப்டி ப்ளே ஆஃப் தேர்வு நடக்கும்?