மகளிர் டி20 சேலஞ்ச் தொடரில் இறுதிப்போட்டியில் சூப்பர்நோவாஸ் - ட்ரையல்ப்ளேசர்ஸ் அணிகள் ஆடியது. இதில் டாஸ் வென்ற சூப்பர்நோவாஸ் அணியின் கேப்டன் ஹர்மன் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
பின்னர் 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சூப்பர்நோவாஸ் அணி களமிறங்கியது. அதில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சமாரி அட்டப்பட்டு 6 ரன்களில் வெளியேறி அதிர்ச்சியளித்தார். இதனால் சூப்பர்நோவாஸ் அணி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
ஜெமிமா ரோட்ரிக்ஸ் - டானியா பாட்டியா இணை நிதானமாக ஆடி பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 28 ரன்கள் சேர்த்தது. 7ஆவது ஓவரில் டானியா 14 ரன்களில் ஆட்டமிழக்க, அதனைத்தொடர்ந்து 9ஆவது ஓவரில் ரோட்ரிக்ஸ் 13 ரன்களில் வெளியேறினார்.
இதனால் சூப்பர்நோவாஸ் அணியின் ஸ்கோர் ஆமை வேகத்தில் ஏறியது. பின்னர் சிரிவர்தனே - கேப்டன் ஹர்மன் இணை சிங்கிள்களாக அடித்து ஸ்கோரை ஏற்றினர். இதனால் 14 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 70 ரன்கள் எடுத்திருந்தது.
15ஆவது ஓவரில் சிரிவர்தனே 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பானது. பின்னர் ஹர்மன் அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். 17 ஓவர்களில் 85 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி 19 பந்துகளுக்கு 34 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அதில் 18ஆவது ஓவரில் 6 ரன்கள் மட்டுமே சேர்க்கப்பட்டது.
19ஆவது ஓவரில் அனுஜா 8 ரன்களிலும், ஹர்மன் 30 ரன்களிலும், வஸ்தேக்கர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க சூப்பர்நோவாஸ் அணியின் தோல்வி உறுதியானது. இறுதியாக கடைசி ஓவரில் 24 ரன்கள் எடுக்க வேண்டிய நிலை வந்தது. அதில் 7 ரன்கள் மட்டுமே சேர்க்க, ட்ரையல்ப்ளேசர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, முதல்முறையாக மகளிர் டி20 சேலஞ்ச் கோப்பையை வென்று அசத்தியது.
இதையும் படிங்க:மும்பை அணியுடன் தாக்குப்பிடிப்பாரா தொடக்க வீரர் ஸ்டோய்னிஸ்?