நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டியில் ஹைதராபாத் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தியது. இதனால் ஆர்சிபி அணியின் ஐபிஎல் பயணம் முடிவுக்கு வந்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் லீக் தொடரை சிறப்பாகத் தொடங்கிய ஆர்சிபி அணியால், சரியாக முடிக்கவில்லை. ப்ளே ஆஃப் சுற்றுக்குள் முன்னேறுவதற்குள் ஆர்சிபி அணியில் உள்ள ஓட்டைகள் அனைத்தும் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. இதனால் நேற்றைய போட்டி முடிந்தவுடன், ஆர்சிபி அணி செய்த தவறுகள் அனைத்தையும் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பதிவிடத் தொடங்கியுள்ளனர்.
அதில் கேப்டன் விராட் கோலியின் கேப்டன்சியை பற்றி சில விமர்சனங்கள் வந்த நிலையில், முன்னாள் இந்திய வீரர் கவுதம் கம்பீர் கோலியை கேப்டன் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என ஆவேசமாக பேசியுள்ளார்.
இதைப்பற்றி கம்பீர் கூறுகையில், ''நானாக இருந்தால் நிச்சயம் கோலியை கேப்டன்சி பதவியிலிருந்து நீக்கியிருப்பேன். தலைமையில் இருப்பவர்களை கேள்விக்குள்ளாக்காமல் இருப்பதுதான் பெரும் பிரச்னை. எட்டு ஆண்டுகளாக ஒரு தொடரில் ஒருமுறை கூட கோப்பையைக் கோலியால் வெல்ல முடியவில்லை. எனக்கும் கோலிக்கும் இடையே பிரச்னைகள் எதுவும் இல்லை. இது அவரைப் பற்றிய விமர்சனம்தான்.
வேறு ஏதேனும் கேப்டன்கள் இப்படி இருக்கிறார்களா என்றால் இல்லை தான் பதில். எட்டு வருடமாக கேப்டனாக வேண்டாம், அணியின் வீரராகவே கோப்பையை வெல்லாமல் யாராலும் பயணம் செய்ய முடியாது. இந்தத் தோல்விக்கு பொறுப்பேற்று, கோலி தனது பதவியிலிருந்து விலக வேண்டும்.
பஞ்சாப் அணிக்காக அஸ்வின் இரண்டு வருடம் கேப்டனாக செயல்பட்டார். அவரால் கோப்பையை வெல்ல முடியவில்லை என்றபோது, உடனடியாக அடுத்த கேப்டனுக்கு சென்றுவிட்டார்கள். ரோஹித் ஷர்மா, எம்.எஸ். தோனி ஆகியோர் தங்களது அணிகளுக்காக கேப்டனாக பல கோப்பைகளை வென்றுகொடுத்துவிட்டார்கள். அதனால் தான் அவர்கள் வெற்றிகரமான கேப்டனாகவும், நீண்ட ஆண்டுகளாகவும் கேப்டனாக தொடர்கிறார்கள்.