சேலம்: ஐபிஎல் போட்டிகளின் 'யார்க்கர் நாயகன்' நடராஜனுக்கு கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில், சேலத்தில் இயங்கி வரும் 'நடராஜன் கிரிக்கெட் அகாதமி' குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு.
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் சீசனில் தமிழ்நாடு வேகப் பந்துவீச்சாளர் நடராஜன் தங்கராசு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடி வருகிறார். இதில் கடந்த செப்.29ஆம் தேதி டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிரான போட்டியின் போது, தனது கடைசி ஓவரை வீசிய நடராஜன், தொடர்ந்து ஐந்து யார்க்கர் பந்துகளை வீசி எதிரணிக்கு நெருக்கடியை கொடுத்திருந்தார்.
மேலும் பேட்டிங் ஜாம்பாவன் சச்சின் டெண்டுல்கர், பந்துவீச்சு ஜாம்பவான் பிரெட் லீ ஆகியோரது பாராட்டுகளையும் பெற்றிருந்தார். இதனால் தமிழ்நாடு கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் நடராஜனின் பெயர் பதியத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் கிரிக்கெட் வீரராக தான் மட்டும் வளர்ந்தால் போதாது என்று உணர்ந்த நடராஜன், தான் விளையாடிய அதே சின்னப்பம்பட்டி கிராமத்தில் நடராஜன் கிரிக்கெட் அகாதமி என்ற பெயரில் கிரிக்கெட் பயிற்சி பள்ளியையும் தொடங்கியுள்ளார்.
அதற்கென தனியாக இடம் வாங்கி, ஆர்வமுள்ள கிராமத்து கிரிக்கெட் வீரர்களுக்கு அங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இப்பயிற்சி பள்ளியில் சின்னப்பம்பட்டி பகுதி இளைஞர்கள் மட்டுமின்றி, சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 30க்கு மேற்பட்ட இளைஞர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர்.
அதேசமயம் இங்கிருந்து சர்வதேச தரம் வாய்ந்த வீரர்கள் உருவாகி வருவதாக நடராஜன் கிரிக்கெட் அகாதமி பயிற்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். நடராஜனின் யார்க்கர் நுட்பத்தின் வளர்ச்சியை அவரின் கிரிக்கெட் அகாதமியைச் சேர்ந்த பயிற்சியாளர் பிரகாஷ் மிகுந்த உற்சாகத்தோடு நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது," நடராஜன் யார்க்கர் பந்து வீசுவதை இங்குதான் கற்றுக் கொண்டார். கடந்த 2009 ஆம் ஆண்டிலிருந்து நாங்கள் சின்னப்பம்பட்டி சுற்றியுள்ள பகுதிகளில் டென்னிஸ் பந்து கொண்டு கிரிக்கெட் விளையாடுவோம். லென்த் பந்து போட்டால் அதை பேட்ஸ்மென்கள் அடித்து விடுவார்கள் என்பதால் யார்க்கர் பந்து வீசக் கற்றுக்கொண்டார்.
அதிலேயே அவர் நன்கு பயிற்சி செய்தார். அதனால் யார்க்கர் பந்து போடுவது அவருக்குப் பழக்கமாகி உள்ளது. அதுவே அவரது ஸ்டைல் ஆக மாறியுள்ளது. அவர் மேலும் கடினமாக முயற்சி மேற்கொண்டு இந்திய அணியில் பந்து வீச்சாளராக இடம் பிடிக்க வேண்டும் என்பதே எங்களது ஆசை. அதை அவர் கண்டிப்பாக அடைவார்.