ஐக்கிய அரபு அமீரகத்தில் நடப்பாண்டு ஐபிஎல் சீசன் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்றுவருகிறது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றும் வகையில் அமைந்திருந்த லீக் போட்டிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் சீசனில் ரசிகர்கள் எதிர்பார்க்காத பல மாற்றங்களை ஐபிஎல் அணிகள் செய்திருந்தன. அவற்றில் பந்துவீச்சாளர்களில் வரிசையில் ஏற்படுத்திய ஆச்சரியமளிக்கும் மாற்றங்கள் அணிகளுக்கு எவ்வாறு உதவியது என்பது குறித்து காண்போம்.
ஜஸ்பிரித் பும்ரா (மும்பை இந்தியன்ஸ்)
ஐபிஎல் தொடரின் நட்சத்திர பந்துவீச்சாளர் என்றால் அது பும்ராதான். தனது அபாரமான யார்க்கர் திறமைக்காகவும், அசத்தலான ஸ்விங்கிற்காகவும் பெயர்போன இவர், இந்தாண்டு ஐபிஎல் தொடரில் தொடக்க ஓவர்களை வீசியிருந்தது மும்பை அணிக்கு பெரும் பக்க பலமாக அமைந்திருந்தது.
வழக்கமாக டெத் ஓவர்களில் கைத்தேர்ந்தவரான பும்ரா, இம்முறை தொடக்க ஓவர்களிலேயே எதிரணியின் விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். மும்பை அணியின் போல்ட், குல்டர் நைல் எனத் தொடக்க பந்துவீச்சாளர்கள் இருந்தபோதும் பும்ராவை தொடக்க பந்துவீச்சாளராக மும்பை அணி தேர்வு செய்திருந்தது யாரும் எதிர்பாராத ஒன்றுதான்.
மேக்ஸ்வெல் (கிங்ஸ் லெவன் பஞ்சாப்)
அதிரடி ஆட்டத்திற்குப் பெயர்போன மேக்ஸ்வெல்லிற்கு இந்தாண்டு பேட்டிங் சுத்தமாக எடுபடவில்லை என்றுதான் கூற வேண்டும். ஏனெனில் இதுவரை களமிறங்கிய போட்டிகளில் அவரின் பேட்டிங்கை கண்டு ரசிகர்கள் கொந்தளித்தது அனைவரும் அறிந்த ஒன்றே.
ஒரு கட்டத்தில் அவருக்கு ஏன் தொடர்ந்து வாய்ப்பளித்து வருகிறீர்கள் என்ற கேள்விகளும் பஞ்சாப் அணியிடம் தொடுக்கப்பட்டன. அதற்குப் பதிலளிக்கும்விதமாக பேட்ஸ்மேனான மேக்ஸ்வெல், பந்துவீச்சாளராக மாறி அசத்திவருகிறார்.
அதிலும் குறிப்பாக பவர் பிளே ஓவர்களில் பந்துவீசி எதிரணிக்கு நெருக்கடியைத் தருவது இன்னும் சிறப்பு. பஞ்சாப் அணியின் இந்த முடிவை ரசிகர்கள் யாரும் எதிர்பார்த்ததில்லை என்பதே நிதர்சன உண்மை.
அக்சர் படேல் (டெல்லி கேப்பிட்டல்ஸ்)
டெல்லி அணியில் இடம்பெற்றிருக்கும் அக்சர் படேல், சமீப காலமாக அந்த அணியின் பவர் பிளே ஓவர்களை வீசிவருகிறார். இடக்கை சுழற்பந்துவீச்சாளரான இவர், தொடக்க ஓவர்களிலேயே எதிரணி பேட்ஸ்மேன்களைக் கதிகலங்க வைத்திருப்பது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதிலும் குறிப்பாக சென்னை அணிக்கெதிரான போட்டியின்போது தனது முதல் ஓவரிலேயே வாட்சனின் விக்கெட்டை வீழ்த்தி, அணியின் வெற்றிக்கு பெரும் உதவிபுரிந்தார்.