ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக வலம்வந்தவர் ஷேன் வாட்சன். 39 வயதாகும் இவர், சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 கிரிக்கெட் லீக்குகளில் ஆடிவந்தார்.
அதிலும் ஐபிஎல் தொடரில் சென்னை அணிக்காக ஆடும்போது ரசிகர்கள் இவருக்கு பெரும் ஆதரவை வழங்கினர். 2008ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ராஜஸ்தான் அணிக்கும், 2016 மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் ஆர்சிபி அணிக்கும், 2018ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரை சென்னை அணிக்காகவும் ஆடியுள்ளார்.
145 போட்டிகளில் பங்கேற்றுள்ள வாட்சன் 3874 ரன்கள் குவித்துள்ளதோடு, 92 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். அனைவருக்கும் வாட்சன் என்றதும், முக்கியப் போட்டிகளில் சிறப்பாக ஆடக் கூடியவர் என்று நினைவில் வரும். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்காகவும் சரி, ராஜஸ்தான் அணிக்காகவும் சரி, சென்னை அணிக்காகவும் சரி அனைத்து முக்கிய போட்டிகளிலும் மேட்ச் வின்னராக வலம்வந்தவர்.
அதிலும் 2018ஆம் ஆண்டு சென்னை அணி திரும்பி வரும்போது சதம் விளாசி கோப்பையைப் பெற்றுக் கொடுத்தார். மீண்டும் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியிலும் காலில் காயம் ஏற்பட்டபோதும் கடைசி ஓவர் நின்று வெற்றிக்காக போராடினார்.