ஐபிஎல் தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கான எலிமினேட்டர் போட்டியில் பெங்களூரு - ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணி 132 ரன்களை இலக்காக நிர்ணயித்தது.
பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் - ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தொடக்கம் கொடுத்தனர். முதல் ஓவரிலேயே சிராஜ் ஸ்ரீவட்ஸ் கோஸ்வாமி தனது விக்கெட்டை பறிக்கொடுக்க, போட்டி லோ ஸ்கோரிங் த்ரில்லராக இருக்க போகிறது என்பது நிரூபனமானது. அதற்கேற்ப ஆர்சிபி அணியின் பந்துவீச்சாளர்களும் சரியான இடங்களில் பிட்ச் செய்து ரன்களைக் கட்டுப்படுத்தினர்.
ப்ரியன் கார்க் விக்கெட்டை வீழ்த்திய ஆர்சிபி அணி முதல் 4 ஓவர்களில் 23 ரன்கள் மட்டுமே எடுத்த ஹைதராபாத் அணி, வாஷிங்டன் சுந்தர் வீசிய 5ஆவது ஓவரில் 12 ரன்களை எடுத்தது. இதனைத்தொடர்ந்து வீசப்பட்ட 6ஆவது ஓவரில் தொடர்ந்து இரு பவுண்டரிகளை விளாசிய வார்னர், மூன்றாவது பந்தில் ஆட்டமிழந்தார். இதனால் பவர் ப்ளே ஓவர்களின் இறுதியில் ஹைதராபாத் அணி 48 ரன்கள் எடுத்திருந்தது.
தொடக்க வீரர்களை வீழ்த்திய சிராஜ் பின்னர் வந்த ஸாம்பா - சாஹல் இணை டைட் லைனில் தொடர்ந்து வீசியது. இதற்கு பலனாக அதிரடியாக ஆடி வந்த மனீஷ் பாண்டே 24 ரன்களில் வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 60 ரன்கள் எடுத்திருந்தது. அதையடுத்து சாஹல் ஓவரில் ப்ரியம் கார்க் 7 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டத்தில் ஆர்சிபியின் கைகள் ஓங்கியது.
பின்னர் ஜேசன் ஹோல்டர் - வில்லியம்சன் ஆகியோர் இணைந்து ஆர்சிபி அணியின் பந்துவீச்சைக் கவனமாக எதிர்கொண்டனர். சிங்கிள்கள் எடுத்துக்கொண்டே வில்லியம்சன் சரியான நேரத்தில் பவுண்டரிகளையும், சிக்சர்களையும் விளாசினார். இதனால் கடைசி மூன்று ஓவர்களில் 28 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலை வந்தது.
18ஆவது ஓவரில் வில்லியம்சன் ஒரு பவுண்டரி அடிக்க, 10 ரன்கள் சேர்க்கப்பட்டது. இதே ஓவரில் வில்லியம்சன் கொடுத்த கேட்ச் வாய்ப்பை படிக்கல் தவறவிட்டார். ஆட்டத்தின் இறுதியில் ஹோல்டர் பவுண்டரி அடிக்க ஹைதராபாத் அணி வெற்றிபெற்றது. இதன்மூலம், ஐபிஎல் தொடரிலிருந்து பெங்களூரு அணி வழக்கம்போது நடையை கட்டியது.
ப்ளே ஆஃப் சுற்றுக்கான இரண்டாவது குவாலிபயரில் ஹைதராபாத், டெல்லி அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி இறுதி போட்டியில் மும்பையை எதிர்கொள்ளும்.