ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் ஹைதராபாத் - மும்பை அணிகள் ஆடி வருகின்றன. இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் வார்னர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
தொடர்ந்து காயம் காரணமாக ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, மீண்டும் இந்தப் போட்டியில் களமிறங்கினார். இதனால் வழக்கம்போல் டி காக்-ரோஹித் கூட்டணி மும்பை அணிக்கு தொடக்கம் கொடுத்தது. களத்திற்கு மீண்டும் திரும்பியுள்ள ரோஹித் ஷர்மா, அதிரடியில் கலக்குவார் என எதிர்பார்த்த நிலையில் நான்கு ரன்களில் வெளியேறினார்.
இதனால் முதல் நான்கு ஓவர்கள் அடக்கி வாசித்த டி காக், சந்தீப் ஷர்மாவின் 4ஆவது ஓவரில் 4,6,6 என அதிரடிக்கு மாறினார். இதன்பின் சுதாரித்த சந்தீப் ஷர்மா, 4ஆவது பந்தில் டி காக்கை 25 ரன்களில் போல்டாக்கினார். பின்னர் சூர்யகுமார் - இஷான் கிஷன் இணை சேர்ந்தது. இந்த இணை நிதானமாக ரன்கள் சேர்க்க, பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 48 ரன்களை மும்பை அணி எடுத்தது.
இதே ஆட்டத்தைத் தொடர்ந்த இந்தக் கூட்டணி, அவ்வப்போது பவுண்டரிகளை விளாசியது. இதனால் 11 ஓவர்கள் முடிவில் 81 ரன்கள் எடுத்திருந்தது. ஆட்டத்தின் கியரை மாற்ற இந்தக் கூட்டணி ஆயத்தமானபோது, நதீம் வீசிய பந்தில் சூர்யகுமார் ஸ்டெம்பிங் செய்யப்பட்டு 36 ரன்களில் வெளியேறினார். அவரைத்தொடர்ந்து வந்த குர்ணால் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமலும், சவுரப் திவாரி 1 ரன்னிலும் ஆட்டமிழக்க, மும்பை அணி 12.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 82 ரன்கள் மட்டுமே எடுத்து திணறத் தொடங்கியது.