2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் பரபரப்பான இறுதிப்போட்டியில் மும்பை - டெல்லி அணிகள் ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி அணி ஸ்ரேயாஸ் ஐயர் - பண்ட் கூட்டணியின் பொறுப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 156 ரன்களை எடுத்தது. பின்னர் 157 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணிக்கு, கேப்டன் ரோஹித் - டி காக் இணை தொடக்கம் கொடுத்தனர்.
கடந்தப் போட்டியைப் போலவே இந்தப் போட்டியிலும் அஸ்வின் முதல் ஓவரை வீசினார். ஆனால் கடந்தப் போட்டியை போல் அல்லாமல், அஸ்வின் பந்தில் ரோஹித் சிக்சர் விளாச, ஆட்டம் அமர்க்களமானது. முதல் ஓவர் முதலே அதிரடியாக இந்த கூட்டணி, டெல்லி அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ரபாடா ஓவரில் 4,4,6,4 என்று 18 ரன்கள் எடுத்தனர். இதனையடுத்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரி விளாச, மும்பை அணியின் ஸ்கோர் மின்னல் வேகத்தில் எகிறியது.
பின்னர் 5ஆவது ஓவரை வீசிய ஸ்டோனிஸ் பந்தில் டி காக் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். இதற்கு பதிலடியாக சூர்யகுமார் யாதவ் வந்த அடுத்த இரு பந்துகளில் பவுண்டரி, சிக்சர் விளாசினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் மும்பை அணி 61 ரன்களை எடுத்தது.