ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 17ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, களமிறங்கிய மும்பை அணிக்கு டி காக் அதிரடியாக விளையாடி ரன் வேட்டையை தொடங்கினார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் தனது 14ஆவது அரைசதத்தையும் பதிவு செய்து அசத்தினார்.
பின்னர் இறுதியில் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் - பாண்டியா ஜோடி எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு விளாசியது. இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டி காக் 67 ரன்களை குவித்தார்.
பின்னர் இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு வார்னர் - பேர்ஸ்டோவ் இணை சிறப்பான தொடக்கத்தை தந்தது. பின்னர் 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பேர்ஸ்டோவ் விக்கெட்டை இழந்து வெளியேறினார்.
தொடர்ந்து வந்த மனீஷ் பாண்டே அதிரடியாக விளையாடி 30 ரன்களுடன் பெவிலியன் திரும்ப, அதற்கடுத்து களமிறங்கிய வில்லியம்சன், பிரியாம் கார்க் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். பின்னர் களமிறங்கிய வீரர்களும் எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் வந்தவேகத்திலேயே திரும்பினர்.
இதனால் 20 ஓவர்கள் முடிவில் ஹைதராபாத் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 174 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவு செய்தது.
இதையும் படிங்க:ரசலுக்கு கொஞ்சம் நேரம் வழங்க வேண்டும்: தினேஷ் கார்த்திக்