ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று (செப்.23) நடைபெற்ற ஐந்தாவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது. அதன்படி களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியின் ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ் ஆகியோர் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன் கணக்கை உயர்த்தினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரோஹித் சர்மா, ஐபிஎல் தொடரில் தனது 37ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் மும்பை இந்தியன்ஸ் அணி ஐந்து விக்கெட்டுகள் இழப்பிற்கு 195 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ரோஹித் சர்மா 80 ரன்களையும், சூர்யகுமார் யாதவ் 47 ரன்களையும் எடுத்தனர்.
இதையடுத்து இமாலய இலக்கை நோக்கி களமிறங்கிய கேகேஆர் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர்களான சுப்மன் கில், சுனில் நரைன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.