ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று (செப்.26) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். அதன்படி களமிறங்கிய ஹைதராபாத் அணிக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிரடி வீரர் ஜானி பேர்ஸ்டோவ் ஐந்து ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.
அவரைத்தொடர்ந்து வார்னருடன் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். மறுமுனையில் அதிரடியாக விளையாடி வந்த வார்னர் 36 ரன்கள் எடுத்திருந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியின் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.