ஐபிஎல் தொடரில் அக்.10 நடைபெற்ற 24ஆவது லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதியது.
பரபரப்பான இந்தப் போட்டியில் கேகேஆர் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றியைப் பதிவுசெய்தது.
இப்போட்டியின் போது சந்தேகத்திற்கிடமான் முறையில் பந்துவீசியதாக கேகேஆர் அணியின் நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் சுனில் நரைன் மீது போட்டி நடுவர்கள் புகாரளித்திருப்பது ஐபிஎல் தொடரில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையடுத்து சுனில் நரைன், ஐபிஎல் நிர்வாகத்தின் பந்துவீச்சு பரிசோதனை குழுவினால், சோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இதனால் கடந்த சில போட்டிகளிலும் அவர் அணியில் இடம்பெறாமல் இருந்தார்.
இந்நிலையில் சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்தான சோதனை முடிவுகளை பந்துவீச்சு பரிசோதனை குழு இன்று (அக்.18) வெளியிட்டது. அதில், சுனில் நரைனின் பந்துவீச்சில் எந்தவித சர்ச்சையும் இல்லையெனவும், இனி ஐபிஎல் தொடரில் அவர் பந்துவீசலாம் என்றும் தெரிவித்துள்ளது.
இதைத்தொடர்ந்து சுனில் இனி வரும் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்பார் என்று கேகேஆர் அணி நிர்வாகம் சார்பிலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நடப்பு ஐபிஎல் தொடரில் சுனில் நரைன் ஆறு போட்டிகளில் பங்கேற்று ஐந்து விக்கெட்டுகளை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: கேகேஆர் அணியில் விளையாடவுள்ள டிம் செஃபெர்ட்!