நேற்று நடந்த ஐபிஎல் தொடரின் கடைசி லீக் ஆட்டத்தில் மும்பை அணியை வீழ்த்தி ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இதற்கு சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளரான சந்தீப் ஷர்மா முக்கியக் காரணமாக அமைந்தார்.
தொடக்கத்திலேயே தொடக்க வீரர்களான ரோஹித் ஷர்மா, டி காக் ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்தி மும்பை அணியின் ரன் குவிப்பை கட்டுக்குள் கொண்டுவந்தார்.
ஹைதராபாத் அணியின் முக்கியப் பந்துவீச்சாளரான புவனேஷ்வர் குமார் ஐபிஎல் தொடரின் பாதியிலேயே வெளியேறியதையடுத்து, அவரது பொறுப்பை சந்தீப் ஷர்மா எடுத்து சிறப்பாகச் செய்துவருகிறார். நேற்று நடந்த போட்டியில் இவரது செயல்பாடுகள் பலரையும் ஈர்த்துள்ளது.
இது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் தனது ட்விட்டர் பக்கத்தில், ''ஹைதராபாத் அணிக்காக மீண்டும் ஒருமுறை சந்தீப் ஷர்மா சிறப்பாகச் செயல்பட்டுள்ளார். அவருக்கான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை.
நிச்சயம் புவனேஷ்வர் குமார் காயம் காரணமாக வெளியேறிய நிலையில், அவரது இடத்தை நிரப்பியதற்காகவே சரியான அங்கீகாரம் கொடுக்கப்பட வேண்டும். இந்த ஐபிஎல் தொடரில் இவரது கன்சிஸ்டன்சி என்னைப் பெரிய அளவில் ஈர்த்துள்ளது'' எனப் பாராட்டியுள்ளார்.
ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ள நிலையில், எலிமினேட்டர் சுற்றில் ஆர்சிபி அணியை எதிர்கொள்ளவுள்ளது.
இதையும் படிங்க:இலக்கை அல்ல, ஆட்டத்தை முடிக்கவே நினைத்தேன்”- மார்தட்டும் ரஹானே!