ரசிகர்களின் பெரும் ஆதரவுடன் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று (செப்.26) நடைபெறவுள்ள எட்டாவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.
ஷேக் சயீத் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டி, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் இரு அணிகளும் தோல்வியைத் தழுவியுள்ளதால், இன்றைய போட்டியில் முதல் வெற்றியைப் பெற இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதில் சந்தேகமில்லை.
இதனால் இன்றைய போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் கேகேஆர் அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. மேலும் ரஸ்ஸல், நரைன், சுப்மன் கில், இயன் மோர்கன், நிதீஷ் ராணா என அதிரடி வீரர்கள் இருந்தும், தொடரின் முதல் போட்டியில் கேகேஆர் அணி படுமோசமான தோல்வியைச் சந்தித்துள்ளது.
இதனால் ஹைதராபாத் அணியுடனான இன்றைய போட்டியில் வெற்றி பெறவேண்டிய கட்டாயத்தில் கேகேஆர் அணி தள்ளப்பட்டுள்ளது. இன்றைய போட்டியில் ரஸ்ஸல், இயன் மோர்கன், சுப்மன் கில், நிதீஷ் ராணா ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், கேகேஆர் அணியின் வெற்றி உறுதி என்பதில் சந்தேகமில்லை.
அதேபோல் பந்துவீச்சு தரப்பில் பாட் கம்மின்ஸ், சுனில் நரைன், குல்தீப் யாதவ் போன்ற அனுபவ வீரர்களுடன் ஷிவம் மாவி, சந்தீப் வாரியர் போன்ற இளம் வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். அதிலும் ஷிவம் மாவி, மும்பை அணிக்கெதிரான போட்டியின் போது முதல் ஓவரில் டி காக்கின் விக்கெட்டை வீழ்த்தியது மட்டுமில்லாமல், அந்த ஓவரை மெய்டனாகவும் மாற்றினார்.
மேலும் அப்போட்டியில் அவர் ரோஹித் சர்மாவின் விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தியிருந்தார். இதனால் இன்றைய போட்டியில் ஷிவம் மாவி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:
டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் இந்த சீசனின் முதல் போட்டியை பெங்களூரு அணியுடன் மோதியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டேவிட் வார்னர், அன்றைய போட்டியில் எதிர்பாராத விதமாக ரன் அவுட் ஆகி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த பேர்ஸ்டோவ் இறுதி வரை களத்தில் நின்று ஆட்டத்தை முடிப்பார் என எதிர்பார்த்த போது, 61 ரன்களில் அவரும் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பியது, அணியின் தோல்விக்கு வித்திட்டது.