செப். 19ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடர் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமின்றி பட்டையை கிளப்பி வருகிறது. இந்நிலையில் இன்று (அக்.05) நடைபெறும் 19ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் இந்த சீசனில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியை பதிவு செய்துள்ளதால், இன்றைய ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்ளிடத்தில் அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி இந்த சீசனில், பங்கேற்ற நான்கு போட்டிகளில் மூன்றில் வெற்றியும், ஒன்றில் தோல்வியையும் சந்தித்துள்ளது. தொடக்க போட்டிகளில் சோபிக்காமலிருந்த விராட் கோலி, ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் அரைசதமடித்து மீண்டும் தனது ஃபார்மிற்கு திரும்பியுள்ளார்.
அதேசமயம் தேவ்தத் படிகல், ஆரோன் ஃபிஞ்சு, ஏபிடி வில்லியர்ஸ் ஆகியோரும் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால், இன்றைய போட்டியிலும் அவர்களின் அதிரடி தொடரும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.
பந்துவீச்சைப் பொறுத்தவரையில் யுஸ்வேந்திர சஹால் தொடர்ந்து தனது திறனை வெளிப்படுத்தி வருகிறார். வாஷிங்டன் சுந்தரும் தனது பங்கிற்கு ரன்களை கட்டுப்படுத்துவதில் ஆதிக்கத்தை செலுத்துகிறார். தொடர்ந்து இரு வெற்றிகளைப் பெற்றுள்ள பெங்களூரு அணி, இன்றைய ஆட்டத்தில் ஹாட்ரிக் அடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்:
ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி இந்த சீசனில் இதுவரை பங்கேற்ற நான்கு போட்டிகளில், மூன்றில் வெற்றியையும், ஒன்றியில் தோல்வியையும் தழுவியுள்ளது.
தொடர்ந்து அதிரடியில் அசத்தி வரும் ஸ்ரேயாஸ் ஐயர், ப்ரித்வி ஷாவுடன், தற்போது ஷிகர் தவானும் அதிரடியை வெளிப்படுத்த தொடங்கியுள்ளார். இதனால் எதிரணியினருக்கு டெல்லி அணியை வீழ்த்துவது சற்று கடினமாக மாறியுள்ளது.