பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரில் 13ஆவது சீசன் ஆரவாரத்துடன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறவுள்ள 12ஆவது லீக் ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் மோதவுள்ளது.
துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ள இப்போட்டியானது, இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. பட்லர், சாம்சன், ரஸ்ஸல், நரைன் என சிக்சர் மன்னர்கள் நேருக்கு நேர் சந்திக்கவுள்ளதால், இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
இந்த சீசனின் முதல் இரண்டு போட்டிகளையும் வெற்றியுடன் தொடங்கியுள்ள ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இன்றைய போட்டியிலும் வெற்றியை ஈட்டும் முயற்சியில் இறங்கியுள்ளது. அதிலும் பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் இமாலய இலக்கை எட்டியும் அசத்தியுள்ளது.
அந்த அணியில் சஞ்சு சாம்சன், ஸ்டீவ் ஸ்மித், திவேத்தியா, ஆர்ச்சர் என அனைவரும் பேட்டிங்கில் அசத்தி வருவதால், இந்த சீசனின் மிகவும் வலிமை மிக்க அணியாகவும் ராஜஸ்தான் கருதப்படுகிறது. பந்துவீச்சிலும் டாம் கர்ரன், ஆர்ச்சர், உனாத்கட் ஆகியோர் எதிரணிக்கு நெருக்கடி கொடுத்து வருவதால் ராஜஸ்தான் அணி இந்த சீசனில் புதிய ஒரு அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளது.
மேலும் அணிக்கு திரும்பியுள்ள ஜோஸ் பட்லர் முதல் போட்டியில் சொதப்பியிருந்தாலும், அவருடைய அதிரடியான பேட்டிங் திறன் இன்றைய போட்டியில் வெளிப்படும் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். ரசிகர்களின் எதிர்பார்ப்பை இன்றையப் போட்டியில் பட்லர் நிறைவேற்றுவாரா என்பதனை பொறுத்திருந்து பார்ப்போம்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:
மும்பை அணியுடனான முதல் போட்டியில் கேகேஆர் அணி தோல்வியைத் தழுவினாலும், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்று "கம்பேக்" கொடுத்துள்ளது. அதிலும் இளம்வீரர் சுப்மன் கில், ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் இறுதிவரை களத்திலிருந்து வெற்றிப் பெற்றுத்தந்துள்ளார்.
இருப்பினும் ரஸ்ஸல், நரைன், தினேஷ் கார்த்திக் ஆகியோர் தொடர்ந்து பேட்டிங்கில் சொதப்புவதால், இன்றையப் போட்டியில் அவர்கள் தங்களது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த காத்திருக்கின்றனர். அதேசமயம் இயன் மோர்கன், நிதீஷ் ராணா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை தோல்வியிலிருந்து மீட்க உதவி வருகின்றனர்.