ரசிகர்கள் பெரும் அதரவுடன் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன், தற்போது இறுதிகட்டத்தை நெருங்கி வருகிறது. இதில் இன்று நடைபெறும் 31ஆவது லீக் ஆட்டத்தில் விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியுடன் மோதுகிறது.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. கெய்ல், டி வில்லியர்ஸ், ஃபிஞ்ச், ராகுல் என நட்சத்திர வீரர்கள் இன்றைய ஆட்டத்தில் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இந்த சீசனில் தொடர் தொல்விகளைச் சந்தித்து புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இனி வரும் போட்டிகளில் நிச்சயம் வெற்றிபெற்றால் மட்டுமே பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற முடியும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இதனால் இன்றைய ஆட்டத்தில் டி20 கிரிக்கெட்டின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் களமிறங்கவுள்ளதாகவும், தகவல் வெளியாகியுள்ளது. கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும், அணியின் நடுநிலை வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவது அணியின் தோல்விக்கு காரணமாக அமைந்துள்ளது.
பந்துவீச்சு தரப்பில் ஷமி, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின் ஆகியோர் தொடர்ந்து தங்களது பங்களிப்பை அணிக்கு வழங்கி வருகின்றனர். இன்றைய போட்டியில் பஞ்சாப் அணி கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளதால், ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.