கரோனா அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் பார்வையாளர்களின்றி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.25) நடைபெற்ற எட்டாவது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். இதையடுத்து களமிறங்கிய ஹைதராபாத் அணியின் பேர்ஸ்டோவ், ஐந்து ரன்களில் விக்கெட் இழந்து ஏமாற்றமளித்தார். அவரைத் தொடர்ந்து டேவிட் வார்னரும் 36 ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அதன் பின்னர் ஜோடி சேர்ந்த மனீஷ் பாண்டே - சஹா இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதில் சிறப்பாக விளையாடிய மனீஷ் பாண்டே ஐபிஎல் தொடரில் தனது 16ஆவது அரை சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
இதன் மூலம் ஹைதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மனீஷ் பாண்டே 51 ரன்களை எடுத்தார்.