2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கியது. முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்தி சென்னை அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதனைத்தொடர்ந்து சென்னை அணி தனது இரண்டாவது போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. நாளை நடக்கவுள்ள போட்டியில் பங்கேற்பதற்காக அந்த அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே அந்த அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோஸ் பட்லர் லண்டனிலிருந்து திரும்பியிருந்த நிலையில், இன்னும் குவாரண்டைன் காலத்தை முடிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், '' ஐபிஎல் தொடரில் பங்கேற்க ஆர்வமாக உள்ளேன். கரோனா சூழலுக்கு மத்தியில் இங்கிலாந்தில் பல கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றது மகிழ்ச்சியாக உள்ளது. ஐபிஎல் முதல் போட்டியில் சென்னை அணியின் வெற்றி, சாம் கரண் சில சிக்சர்கள் அடித்ததைப் பார்த்ததில் மகிழ்ச்சியாக இருந்தது.
சாம் கரண் சென்னை அணிக்காக அடிக்கும் சிக்சர்களோடு, டாம் கரண் ராயல்ஸ் அணிக்காக அதிக சிக்சர்கள் அடிக்க வேண்டும் என அவரிடம் கூறியுள்ளேன். ராஜஸ்தான் அணிக்காக முதல் போட்டியில் பங்கேற்க முடியாது. ஏனென்றால் நான் குடும்பத்தினருடன் ஐக்கிய அரபு அமீரகம் வந்துள்ளேன். என் குடும்பத்தினரை என்னுடன் தங்க அனுமதித்ததற்கு நன்றி.
பென் ஸ்டோக்ஸ் குடும்பத்தினருடன் உள்ளார். நிச்சயம் இன்னும் சில நாள்களில் ஐபிஎல் தொடரில் பங்கேற்பேன் என நம்புகிறேன். டி20 போட்டிகளில் தொடக்க வீரராக களமிறங்குவதையே விரும்புகிறேன். ஆனால் எனது கேப்டனும், பயிற்சியாளர்களும் வேறு இடத்தில் களமிறங்கினாலும் நிச்சயம் நன்றாக ஆடுவேன்'' என்றார்.
இதையும் படிங்க:அடுத்த விக்கெட்டை இழக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ்