ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் கோலாகலமாக நடைபெற்றுவருகிறது. இத்தொடரில் இன்று நடைபெறும் 10ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, மும்பை அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.
துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும் இப்போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இந்திய அணியின் கேப்டன் மற்றும் துணைக்கேப்படன் ஆகியோர் இந்த சீசனில் முதல் முறையாக மோதவுள்ளதால் இன்றைய ஆட்டத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் அதிகரித்துள்ளது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:
விராட் கோலி தலைமையிலான பெங்களூரு அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் சிறப்பான வெற்றியைப் பெற்றிருந்தாலும், பஞ்சாப் அணியுடனான இரண்டாவது போட்டியில் 97 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைத் தழுவியது. மேலும் இந்த சீசனில் விராட் கோலியின் மோசமான ஃபார்ம் காரணமாக, பல்வேறு தரப்பிலிருந்தும் கோலி மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
ஏபிடி வில்லியர்ஸ், ஆரோன் ஃபிஞ்ச் ஆகியோர் தொடர்ந்து தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது மட்டுமே ஆர்சிபி அணியின் பலமாக கருதப்படுகிறது. இன்றைய ஆட்டத்தின் போது கேப்டன் விராட் கோலி நிச்சயம் விளையாடவேண்டிய சூழ்நிலையும் ஏற்பட்டுள்ளது.
அதேசமயம் முதல் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தேவ்தத் படிகல், இன்றைய போட்டியில் தனது திறமையை மீண்டும் நிரூபிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் உமேஷ் யாதவ், டேல் ஸ்டெயின், நவ்தீப் சைனி ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருவதினால், மும்பை அணிக்கெதிரான போட்டியில் இவர்களில் யார் இடம்பெறுவார் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.
தன் மீது எழுந்துள்ள விமர்சனங்களுக்கு விராட் கோலி இன்றைய போட்டியில் முற்றுப்புள்ளி வைப்பாரா என்பதனையை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
மும்பை இந்தியன்ஸ்:
நடப்புச் சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவினாலும், கொல்கத்தா அணியுடான போட்டியில் வெற்றி பெற்று அசத்தியது. வலிமையான பேட்டிங்கை கொண்டுள்ள மும்பை அணியில், ரோஹித் சர்மா மீண்டு தனது ஃபார்முக்கு திரும்பியுள்ளது அணியின் வெற்றிக்கு உறுதுணையாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.