ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்றுள்ளது. இத்தொடரில் இன்று நடைபெற்ற 15ஆவது லீக் ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய அந்த அணியில் பட்லர், ஸ்மித், சாம்சன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய லமோர் அதிரடியாக விளையாடி 47 ரன்களை குவித்தார். இறுதியில் ராகுல் திவேத்தியா, ஜோஃப்ரா ஆர்ச்சர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மஹிபால் லமோர் 47 ரன்களை எடுத்தார். பெங்களூரு அணி சார்பில் யுஸ்வேந்திர சஹால் 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தினார்.