ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் நேற்று(அக்.1) நடைபெற்ற 13ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி 48 ரன்கள் வித்தியாசத்தில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.
இப்போட்டியில் விளையாடிய மும்பை அணியின் கேப்டன் ரோஹித் சர்மா, 70 ரன்களை விளாசியிருந்தார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் ஐந்தாயிரம் ரன்களை கடந்த மூன்றாவது நபர் என்ற சாதனையை படைத்தார்.
ரோஹித் சர்மா, தனது 192ஆவது ஐபிஎல் போட்டியில் இச்சாதனையை நிகழ்த்தியுள்ளார். இந்தப் பட்டியலில் ஆர்சிபி அணியின் கேப்டன் விராட் கோலி 180 போட்டிகளில், 5,430 ரன்களை குவித்து முதலிடத்திலும், சிஎஸ்கே அணியின் வீரர் சுரேஷ் ரெய்னா 193 போட்டிகளில் பங்கேற்று, 5,368 ரன்களுடன் இரண்டாம் இடத்தில் உள்ளனர்.
இந்தவரிசையில், ஐந்தாயிரத்து 68 ரன்கள் எடுத்து, ரோஹித் சர்மா பட்டியலில் மூன்றாவது நபராக இடம்பெற்று, புதிய மைல் கல்லை எட்டியுள்ளார். அவரின் இந்த சாதனையை கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடிவருவதோடு, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகின்றனர்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: ஹைதராபாத்தை வீழ்த்தி மீண்டும் வெற்றி பாதைக்குத் திரும்புமா சிஎஸ்கே?