ஐபிஎல் தொடரில் இன்று (அக்.20) நடைபெற்று வரும் 38ஆவது லீக் ஆட்டத்தில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்த்து விளையாடியது. இப்போட்டியில் முதலில் பேட்டில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி பேட்டிங் செய்ய தீர்மானித்தது.
அதன்படி களமிறங்கிய டெல்லி அணியின் பிரித்வி ஷா, கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். ஆனால் மறுமுனையில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஷிகர் தவான், அரைசதம் கடந்து அசத்தினார்.
தொடர்ந்து அதிரடி ஆட்டத்தில் மிரட்டி வந்த தவான், எதிரணியின் பந்துவீச்சை பவுண்டரிகளுக்கு பறக்கவிட்டு ருத்ரதாண்டவமாடினார். சிறப்பாக விளையாடிய தவான், 57 பந்துகளில் தனது இரண்டாவது ஐபிஎல் சதத்தைப் பதிவு செய்து அசத்தினார். இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் அடுத்தடுத்து இரண்டு சதங்களை விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் தவான் படைத்துள்ளார்.
இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 5 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் 106 ரன்களை குவித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
இதையும் படிங்க:சர்வதேச கிரிக்கெட்டில் பத்து ஆண்டுகளை கடந்த தவான்!