கிங்ஸ் லெவன் பஞ்சாப் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான லீக் போட்டி நேற்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 20 ஓவரில் நான்கு விக்கெட்டுகளை இழந்து 178 ரன்களை குவித்தது.
வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் வாட்சன் - டூ பிளேசிஸ் அதிரடியாக விளையாடி எதிரணியின் பந்துவீச்சாளர்களை சிதறடித்தனர். இதன் மூலம் 17.4 ஓவரிலேயே சிஎஸ்கே அணி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியைப் பதிவுசெய்தது.
போட்டிக்கு பின்னர் தனியார் விளையாட்டு தொலைக்காட்சிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நாங்கள் இன்று பெற்ற வெற்றி சிறிய விஷயம் தான். ஆனால் இது எங்களுக்கு மிகவும் முக்கியமான ஒன்று. ஏனெனில் நாங்கள் பேட்டிங்கில் மீண்டும் எங்களது திறனை வெளிப்படுத்த தொடங்கியுள்ளோம்.
தொடர்ந்து இதுபோன்ற வெற்றியை சிஎஸ்கே அணி பிரதிபலிக்கும் என நம்புகிறேன். வாட்சன் மீண்டும் ஃபார்முக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது. டூ பிளேசிஸைப் பொறுத்தவரை, அவர் எங்கள் அணியின் நங்கூரம் போன்றவர். எங்களுக்குத் தேவைப்படும் நேரங்களில் அவரது பேட்டிங் மற்றும் பீல்டிங் பெரிதும் பயனளிக்கிறது” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:ஐபிஎல் 2020: பஞ்சாப்பை பந்தாடியது சிஎஸ்கே!