ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (அக்.26) நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதின.
இந்த ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்டியா 21 பந்துகளில் 60 ரன்களை விளாசி அசத்தியிருந்தார்.
மேலும் அரைசதத்தை நிரைவு செய்த பாண்டியா, மைதானத்தில் மண்டியிட்டு ‘பிளாக் லிவ்ஸ் மேட்டர்’ இயக்கத்திற்கு தனது ஆதரவை வெளிப்படுத்தினார்.
ஐபிஎல் தொடரில் ‘கருப்பர்கள் வாழ்க்கை முக்கியம்’ என்ற இயக்கத்திற்கு கிரிக்கெட் வீரர் ஒருவர் ஆதரவை வெளிப்படுத்திருப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் பாண்டியாவின் இப்புகைப்படத்தை தனது ட்விட்டரில் பதிவிட்டு #BLACKLIVESMATTER என்கிற ஹேஷ்டேக்கையும் பயன்படுத்தியுள்ளார். தற்போது பாண்டியாவின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் உலகம் முழுவதும் #BlackLivesMatter என்ற வாசகத்துடன் அடையாளப்படுத்தப்பட்டது. இதனால் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகப் பலரும் இப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடைபெற்ற இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடரின்போது இரு அணி கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் நடுவர்களும் ஒரு சில நொடிகள் மண்டியிட்டு கறுப்பர்களின் வாழ்க்கை முக்கியம் என்கிற இயக்கத்துக்குத் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பார்முலா ஒன்: அதிக போட்டிகளில் வெற்றி பெற்று புதிய சாதனைப் படைத்த ஹேமில்டன்