2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
பின்னர் டெல்லி அணிக்கு தவான் - ஸ்டோய்னிஸ் இணை களமிறங்கியது. இதனை எதிர்பாராமல் இருந்த ஹைதராபாத் அணி வழக்கம்போல் சந்தீப் ஷர்மாவுக்கு முதல் ஓவர் கொடுத்தது. ஆட்டத்தின் இரண்டாவது ஓவரிலேயே அதிரடியை கையில் எடுத்த இந்த பேட்டிங் இணை, ஹைதராபாத் அணியின் அனைத்து பந்துவீச்சாளர்களையும் பவர் ப்ளே ஓவர்களில் வெளுத்து வாங்கினர். அதிலும் ஹோல்டர் வீசிய 4ஆவது ஓவரில் ஸ்டோய்னிஸ் 18 ரன்களை சேர்த்தார்.
இத்தனை ஆட்டங்களாக பவர் ப்ளே ஓவர்களில் விரைவாக விக்கெட் கொடுத்த டெல்லி அணி, பல ஆட்டங்களுக்கு பின் பவர் ப்ளேவில் விக்கெட் கொடுக்காமல் ரன்கள் சேர்த்தது. 6 ஓவர்களில் 65 ரன்களை இந்த இணை சேர்த்தது. தொடர்ந்து அதிரடி காட்டிய இந்த இணை 8 ஓவர்களில் 85 ரன்கள் சேர்த்த நிலையில், 9ஆவது ஓவரில் ரஷீத் கான் வீசிய பந்தில் ஸ்டோய்னிஸ் 38 ரன்கள் எடுத்து வெளியேறினார்.