தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

முதல்முறையாக இறுதி போட்டிக்கு சென்ற டெல்லி!

இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியை வீழ்த்தியதன் மூலம் முதல்முறையாக டெல்லி அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது.

டெல்லி
டெல்லி

By

Published : Nov 9, 2020, 5:11 AM IST

2020ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் டெல்லி - ஹைதராபாத் அணிகள் ஆடுகின்றன. இதில் டாஸ் வென்ற டெல்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.

தவான், ஸ்டோய்னிஸ், ஹெட்மயர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் டெல்லி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 189 ரன்கள் குவித்தது. 190 அடித்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி களமிறங்கிய ஹைதராபாத்துக்கு கேப்டன் வார்னரின் விக்கெட் பேரதிர்ச்சியாக அமைந்தது. மூன்று பந்துகள் விளையாடி 2 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில், அவர் வெளியேறினார். தொடங்க வீரராக களமிறங்கிய பிரியாம் கார்க் 17 ரன்களில் தனது விக்கெட்டை பறிகொடுத்து ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்தார்.

மனீஷ் பாண்டே 21 ரன்களில் வெளியேற, வில்லியம்சன் தனது அதிரடி ஆட்டத்தால் போட்டியை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். இருப்பினும், எதிர்முனையில் இருந்த வீரர்கள் ஏமாற்றத்தை அளித்தனர். போட்டி கடைசி கட்டத்தை எட்டிய நிலையில், அதிரடியாக விளையாடி வந்த வில்லியம்சன், அப்துல் சமாத் ஆகியோர் தங்களின் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இறுதியில், 20 ஓவர்களின் முடிவில் எட்டு விக்கெட் இழப்புக்கு 172 ரன்களை பெற்று ஹைதராபாத் தோல்வியை தழுவியது.

டெல்லி அணியின் வெற்றிக்கு காரணமான ரபாடா நான்கு ஓவர்களை வீசி 29 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஆல்ரவுண்டர் ஸ்டோய்னிஸ் மூன்று ஓவர்களை வீசி 26 ரன்களை விட்டுக்கொடுத்து மூன்று முக்கிய விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கிய ஸ்டோய்னிஸூக்கு ஆட்ட நாயகன் விருது கொடுக்கப்பட்டது. இந்த வெற்றியின் மூலம் முதல்முறையாக டெல்லி இறுதி போட்டிக்கு சென்றுள்ளது. நவம்பர் 10ஆம் தேதி நடைபெறவுள்ள இறுதி போட்டியில் டெல்லி மும்மை அணியை எதிர்கொள்கிறது.

ABOUT THE AUTHOR

...view details