ஐபிஎல் தொடரின் 55ஆவது லீக் ஆட்டத்தில் டெல்லி - பெங்களூரு அணிகள் ஆடின. இதில் டாஸ் வென்ற டெல்லி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.
பின்னர் களமிறங்கிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 152 ரன்கள் எடுத்தது. நார்கியே 3 விக்கெட்டுகளும், ரபாடா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். அதிகபட்சமாக படிக்கல் 50 ரன்கள எடுத்தார்.
பின்னர் 153 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணிக்கு தவான் - ப்ரித்வி ஷா தொடக்கம் கொடுத்தனர். தொடக்கத்திலேயே பவுண்டரிகள் விளாசிய ப்ரித்வி ஷாம் சிராஜ் வீசிய பந்தில் போல்டாகி 9 ரன்கள் வெளியேறினார். பின்னர் தவானுடன் - ரஹானே இணைந்தார்.
இந்த இணை சரியான நேரத்தில் பவுண்டரிகள் விளாசி ரன் ரேட்டை கட்டுக்குள் வைத்துக்கொண்டது. பவர் ப்ளே ஓவர்கள் முடிவில் 53 ரன்கள் எடுத்த டெல்லி அணி, தொடர்ந்து ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரியை விளாசியது. இதனால் 10 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 81 ரன்களை எடுத்தது. பின்னர் அதிரடிக்கு மாறிய தவான், அரைசதம் விளாசினார்.
13ஆவது ஓவரின்போது 54 ரன்கள் எடுத்திருந்த தவான், அஹ்மத் வீசிய பந்தை தேவையின்றி ஸ்வீப் ஷாட் ஆடி விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ரஹானேவுடன் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் இணைந்தார்.
இந்த இணை நிதானமாக ரன்கள் சேர்த்தது. இதனால் 37 பந்துகளில் ரஹானே அரைசதம் விளாசினார். இதன்பின்னர் 17ஆவது ஓவரின்போது அஹ்மத் வீசிய பந்தில் ஸ்ரேயாஸ் ஐயர் 7 ரன்கள் ஆட்டமிழக்க, ரிஷப் பந்த் உள்ளே வந்தார்.
இதனைத்தொடர்ந்து கடைசி மூன்று ஓவர்களில் டெல்லி அணி வெற்றிபெறுவதற்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது சிறப்பாக ஆடிவந்த ரஹானே 60 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் ஸ்டோய்னிஸ் - பந்த் கூட்டணி களத்தில் இருந்தது.
இதன்பின்னர் 19ஆவது ஓவரை வீசுவதற்கு சிராஜ் அழைக்கப்பட்டார். அந்த ஓவரின் 2ஆவது பந்தில் ஸ்டோய்னிஸ் சிக்சர் அடிக்க, ஆட்டம் டெல்லி கைகளுக்குள் சென்றது. பின்னர் அந்த ஓவரின் கடைசி பந்தில் பந்த் பவுண்டரி அடித்து டெல்லி அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார். இறுதியாக டெல்லி அணி 19 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 154 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது.
மேலும் டெல்லி அணி வெற்றிபெற்றதால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு தொகுதிபெற்றது. அதேபோல் டெல்லி அணியை 17.3 ஓவர்களுக்கு மேல் பேட்டிங் ஆட வைத்ததால், பெங்களூரு அணியின் ரன் ரேட் கொல்கத்தா அணியை விட குறையாமல் காப்பாற்றிக் கொண்டது. இதனால் இரு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:மகளிர் டி20 சேலஞ்ச் : 7 புதிய எமோஜிக்களை வெளியிட்ட ட்விட்டர் இந்தியா, பிசிசிஐ!