சார்ஜா: சிஎஸ்கே - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 217 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் நடைபெற்று வருகிறது. இத்தொடரில் இன்று (செப்.22) நடைபெற்ற நான்காவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டது. இப்போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி முதலில் பந்துவீச தீர்மானித்தார்.
அதன்படி களமிறங்கிய ராஜஸ்தான் அணிக்கு தொடக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 6 ரன்களில் விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து ஸ்மித்துடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சம் சென்னை அணியின் பந்துவீச்சை சிக்சர்களாக மாற்றி, பந்து வீச்சாளர்களை கதறவிட்டார்.
சிக்சர் மழை பொழிந்த சஞ்சு சாம்சன் அதிலும் பியூஷ் சாவ்லாவின் முதல் ஓவரிலேயே நான்கு சிக்சர்களை பறக்க வீட்டு ராஜஸ்தான் அணி ருத்ரதாண்டவமாடியது. தொடர்ந்து அதிரடியில் மிரட்டிய சாம்சன் 19 பந்துகளில் ஏழு சிக்கர்களை விளாசி அரைசதம் கடந்தார். இதன் மூலம் 9 ஓவர்களிலேயே ராஜஸ்தான் அணி 100 ரன்களை கடந்திருந்தது.
தொடர்ந்து சிறப்பாக விளையாடிய சாம்சன், 9 சிக்சர்கள், ஒரு பவுண்டரியுடன் 74 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இங்கிடி பந்து வீச்சில் தீபக் சஹாரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து வந்த டேவிட் மில்லர் ரன் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஸ்டீவ் ஸ்மித் அரை சதமடித்து, அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதிலும் பியூஷ் சாவ்லா தனது முதல் இரண்டு ஓவர்களில் 48 ரன்களை வாரி வழங்கினார். பின்னர் வந்த ராஜஸ்தான் வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து பெவிலியன் திரும்ப, ஸ்டீவ் ஸ்மித் ஒற்றையாளாக அணியை தாங்கிச் சென்றார். இறுதியாக களமிறங்கிய ஆர்ச்சர், இங்கிடி வீசிய 19ஆவது ஓவரில் தொடர்ச்சியாக நான்கு சிக்சர்களை பறக்கவிட்டு அசத்தினார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் சாம் கர்ரன் இதன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 217 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக சஞ்சு சாம்சன் 73 ரன்களையும், ஸ்டீவ் ஸ்மித் 80 ரன்களையும் விளாசினர். சென்னை அணி தரப்பில் சாம் கர்ரன் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
இதையும் படிங்க:'உங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றி' - அஸ்வின்!