ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தொலைக்காட்சி வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ், பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் கறுப்பு பட்டை அணிந்து மைதானத்தில் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் சிறப்பான தொடக்கத்தைத் தந்தனர். இதில் அதிரடியாக விளையாடிய ப்ரித்வி ஷா, ஐபிஎல் தொடரில் தனது ஐந்தாவது அரைசதத்தைப் பதிவுசெய்து அசத்தினார்.
இதன் மூலம் டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரித்விஷா 64 ரன்களை விளாசினார். சென்னை அணி தரப்பில் பியூஷ் சாவ்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.