ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 7ஆவது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியுடன் மோதியது.
இப்போட்டியில் முதலில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. மேலும் போட்டி தொடங்குவதற்கு முன்பாக, தொலைக்காட்சி வர்ணனையாளர் டீன் ஜோன்ஸ், பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் ஆகியோருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் அனைவரும் கருப்பு பட்டை அணிந்து மைதானத்தில் நுழைந்தனர்.
இதைத்தொடர்ந்து களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்கள் ப்ரித்வி ஷா - ஷிகர் தவான் ஆகியோர் அதிரடியான தொடக்கத்தை வெளிப்படுத்தினர். இதில் சிறப்பாக விளையாடி வந்த ப்ரித்வி ஷா, தனது ஐந்தாவது ஐபிஎல் அரைசதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.
அரைசதமடித்த மகிழ்ச்சியில் ப்ரித்வி ஷா
இதற்கிடையில் மறுமுனையில் அதிரடியை வெளிப்படுத்த தொடங்கிய தவான் 35 ரன்கள் எடுத்திருந்த நிலையில் விக்கெட்டை இழந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து ப்ரித்வி ஷாவும் 64 என்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.
அவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய ரிஷப் பந்த் - ஸ்ரேயாஸ் ஐயர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோர் கணக்கை உயர்த்தினர். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஐயர் 26 ரன்களில் வெளியேறினார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் பியூஷ் சாவ்லா
இறுதியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்களை குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக ப்ரித்வி ஷா 64 ரன்களையும், ரிஷப் பந்த் 37 ரன்களையும் எடுத்தார். சென்னை அணி சார்பில் பியூஷ் சாவ்லா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதையும் படிங்க: ஐபிஎல் 2020: விராட் கோலிக்கு ரூ.12 லட்சம் அபராதம்!