ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றுவரும் ஐபிஎல் தொடரின் 13ஆவது சீசன் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு பஞ்சமின்றி, ஓவ்வொரு போட்டியும் விறுவிறுப்பாக நடைபெற்றுவருகிறது.
இதில் இன்று (செப். 22) நடைபெறவுள்ள நான்காவது லீக் போட்டியில் தொடரை வெற்றியுடன் தொடங்கியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், முதல் போட்டியில் வெற்றியை ஈட்ட நினைக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் பலப்பரீட்சை செய்யவுள்ளன.
சார்ஜா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியானது இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்கவுள்ளது. ஐபிஎல் வரலாற்றில் அதிக வெற்றி விகிதாசரியைக் கொண்டுள்ள இரு கேப்டன்கள் இன்று நேருக்கு நேர் மோதவுள்ளதால், இப்போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ்:
தொடரின் முதல் போட்டியையே வலிமையான மும்பை அணியை வீழ்த்தி வெற்றிபெற்ற மகிழ்ச்சியில், சென்னை அணி இன்று தனது இரண்டாவது லீக் போட்டியில் விளையாடவுள்ளது. முதல் போட்டியில் ராயுடு, டூ பிளேசிஸ், சாம் கர்ரன், நிகிடி ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அசத்தினர்.
இருப்பினும் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்த தோனி, மும்பை அணிக்கெதிரான போட்டியில் களமிறங்கினாலும், அவருக்கு இரண்டு பந்துகளைப் பிடிக்கும் வாய்ப்பு மட்டுமே கிடைத்தது.
இதனால் இன்றைய போட்டியில் தோனியின் ஆட்டத்தைக் காண ரசிகர்கள் ஆவலுடன் காத்திருகின்றனர். மேலும் முதல் போட்டியில் அசத்திய ‘கடைக்குட்டி சிங்கம்’ சாம் கர்ரன் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. அதேசமயம் இன்றைய ஆட்டத்தைப் பொறுத்தவரை சிஎஸ்கே அணியில் மாற்றமேதும் இருக்காது.
ராஜஸ்தான் ராயல்ஸ்:
ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, இந்த சீசனின் முதல் போட்டியை வலிமையான சென்னை அணியுடன் விளையாடவுள்ளது. அதேசமயம் ராஜஸ்தான் அணியை குறைவாக மதிப்பிட முடியாது.
சஞ்சு சாம்சன், ராபின் உத்தப்பா, டேவிட் மில்லர், ஜோஃப்ரா ஆர்ச்சர் போன்ற அனுபவ வீரர்களுடன், யஷஸ்வி ஜேய்ஸ்வால், ரியான் பராக், கார்திக் தியாகி போன்ற இளம் அதிரடி வீரகள் என நட்சத்திர படையைக் கொண்டுள்ளது. அதிலும் கடந்த அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் விளையாடிய யஷஸ்வி ஜேய்ஸ்வால் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.