இந்தியன் பிரீமியர் லீக்(ஐபிஎல்) தொடரின் 13ஆவது சீசன் நேற்று (செப்.19) ஐக்கிய அரபு அமீரகத்தில் கோலாகலமாகத் தொடங்கியது. தொடரின் முதல் போட்டியில் பலம்பொருந்திய சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. அப்போட்டியில் சென்னை அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீஷனுக்கான ஐபிஎல் பயணத்தை தொடங்கியுள்ளது.
இந்நிலையில் இன்று நடைபெறும் தொடரின் இரண்டாவது லீக் போட்டியில் கே.எல்.ராகுல் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதுவரை நடைபெற்ற 12 சீசன்களில் இவ்விரு அணிகளும் ஒரு முறை கூட கோப்பையை கைப்பற்றியது இல்லை.
அதன் காரணமாகவே, இந்தாண்டு ஐபிஎல் தொடரில் கோப்பையைக் கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கில் வீரர்கள் ஏலத்தின்போது அதிரடி வீரர்களை தங்கள் அணிக்கு ஒப்பந்தம் செய்துள்ளனர். அதிலும் பஞ்சாப் அணி ரவிச்சந்திரன் அஸ்வினை கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கி, நட்சத்திர வீரர் கே.எல்.ராகுலிடம் பொறுப்பை ஒப்படைத்துள்ளது.
சர்வதேச டி20 போட்டிகளில் அசத்தி வரும் கே.எல். ராகுல், பஞ்சாப் அணியின் கேப்டனாக இந்தாண்டு ஐபிஎல் இன்னிங்ஸைத் தொடங்கவுள்ளார். இதன் காரணமாகவே இன்று நடைபெறும் போட்டியின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
அதேபோல் கடந்தாண்டு தனது அபாரமான கேப்டன்சிப்பால் டெல்லி அணியை பிளே ஆஃப் சுற்று வரை கொண்டு சென்ற ஸ்ரேயாஸ் ஐயர், இந்தாண்டும் கோப்பையை வெல்லும் நோக்கில், தனது பணியைத் தொடங்கவுள்ளார்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப்:
ஆண்டுதோறும் அதிரடி வீரர்களுக்கு பஞ்சமில்லால் தொடரை தொடங்கும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி, இதுவரை நடைபெற்ற 12 ஐபில் சீசன்களில் ஒரு முறை மட்டுமே இறுதிப்போட்டி வரை முன்னேறியது. மீதமுள்ள அனைத்து சீசன்களிலும் பிளே ஆஃப் சுற்று வரைகூட, முன்னேறாமல் லீக் சுற்றிலேயே வெளியேறியது.
கடந்த ஆண்டு தமிழ்நாடு வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமையில் களம் கண்ட பஞ்சாப் அணி, கிறிஸ் கெய்ல், கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர் என அதிரடி வீரர்களை வைத்திருந்தும், அவர்களால் லீக் சுற்றைக் கூட தாண்ட முடியவில்லை.
இதன் காரணமாகவே இந்தாண்டு மேக்ஸ்வெல், நிக்கோலஸ் பூரான், ஷெல்டன் காட்ரோல், ஜிம்மி நீஷம், கிறிஸ் ஜோர்டன், கிருஷ்ணப்பா கவுதம் என அதிரடி வீரர்களை ஐபிஎல் ஏலத்தில் ஒப்பந்தம் செய்தது. அதேசமயம் நட்சத்திர வீரர் கே.எல். ராகுலை கேப்டனாகவும் நியமித்து புதுமையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் கிறிஸ் கெய்ல், கருண் நாயர், மயங்க் அகர்வால், முருகன் அஸ்வின், முஜிப் உர் ரஹ்மான் என நட்சத்திர வீரர்களையும் தக்கவைத்துக்கொண்டது. பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் பெரும் பலத்துடன் காணப்படும் கிங்ஸ் லெவன் அணி இன்றைய போட்டியில் தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.
டெல்லி கேப்பிட்டல்ஸ்: