12வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வரும் போட்டியில் அஷ்வின்தலைமையிலான பஞ்சாப் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியுடன் பலப்பரீட்சை நடத்தி வருகிறது.
இதில், டாஸ் வென்ற பஞ்சாப் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. கடந்த போட்டியில் வெற்றிபெற்ற அதே வீரர்களுடன்கொல்கத்தா அணி இன்றைப் போட்டியில் களமிறங்கியுள்ளது.
மறுமுனையில் பஞ்சாப் அணியில் நான்கு மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. அணியில் நிகோலஸ் பூரான், சாம் கரன்,அன்கிட் ராஜ்பூட், முஜிப்-உர்-ரஹ்மான் ஆகியோருக்கு பதிலாக டேவிட் மில்லர், ஹர்துஸ் வில்ஜோயின் (Hardus Viljoen), வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரூவ் டை ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர்.
இந்தப் போட்டியின் மூலம், ஐபிஎல் ஏலத்தில் 8.4 கோடி ரூபாய்க்கு விலைக்கு போன வருண் சக்ரவர்த்தி, ஹர்துஸ் வில்ஜோயின் ஆகியோர் ஐபிஎல் கிரிக்கெட்டில் அறிமுகமாகியுள்ளனர்.
ஒரே ஓவரில் 25 ரன்:
இதைத்தொடர்ந்து, கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் கொல்கத்தா அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் கிறிஸ் லின் ஒரு ரன்னை மட்டுமே எடுத்தாலும், வருண் சக்ரவர்த்தி வீசிய இரண்டாவது ஓவரில் சுனில் நரைன் ஒரு பவுண்டரி, மூன்று சிக்சர்கள் என 25 ரன்களை விளாசினார்.
இதையடுத்து, கிறிஸ் லின் (10), சுனில் நரைன் (24) என அடுத்தடுத்து ஆட்டமிழக்க கொல்கத்தா அணியின் ஸ்கோர் 3.3 ஓவரில் இரண்டு விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்களை எடுத்திருந்த நிலையில், உத்தப்பா - நிதிஷ் ராணா மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்தனர்.