ஐபிஎல் தொடர் உச்சபட்ச பரபரப்பை எட்டியுள்ள நிலையில், இன்று இரண்டு போட்டிகள் நடைபெறுகின்றன. இதன் முதல் போட்டியில் டெல்லி - பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன. ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மிக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெங்களூரு அணி தற்போது தொடர்ந்து வெற்றிகளைப் பெற்று ப்ளே- ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைத்துள்ளது.
பெங்களூரு அணிக்கு இன்று நடைபெறவுள்ள போட்டியோடு சேர்ந்து மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றால் ப்ளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேற வாய்ப்புள்ளது. அந்த அணியின் விராட் கோலி, டி வில்லியர்ஸ், ஸ்டோனிஸ், பார்திவ் படேல் ஆகியோர் சிறப்பாக விளையாடிவருகின்றனர். தொடர்ந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த மொயின் அலி அவரது நாடான இங்கிலாந்துக்கு திரும்பியுள்ளதால் பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. ஸ்டெயின் காயம் காரணமாக விலகியுள்ளதால் பந்துவீச்சிலும் அந்த அணியின் பலம் குறைந்துள்ளது.