இன்றைய ஐபிஎல் போட்டியில் பெங்களூரு - கொல்கத்தா அணிகள் மோதின. அதில் டாஸ் வென்ற கொல்கத்தா கேப்டன் தினேஷ் கார்த்திக் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் ஆடிய பெங்களூரு அணியின் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தால் 20 ஓவர்களில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 205 ரன்களை எடுத்தது.
பின்னர் 206 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் கொல்கத்தா அணி களமிறங்கியது. தொடக்க வீரர்களாக கிறிஸ் லின் - சுனில் நரைன் இணை களமிறங்கி, அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது. முதல் விக்கெட்டுக்கு 28 ரன்கள் சேர்த்த நிலையில், நரைன் 10 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் லின் - உத்தப்பா இணை ஜோடி சேர்ந்தது. இந்த இணை பெங்களூரு அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்க, கொல்கத்தா அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
9.5 ஓவர்களில் 93 ரன்கள் எடுத்த நிலையில் சிறப்பாக ஆடிய உத்தப்பா 25 பந்துகளில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து லின் 43 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் கேப்டன் தினேஷ் கார்த்திக் - ராணா இணை நிதானமாக ரன்களை சேர்த்தது. கடைசி 36 பந்துகளில் 86 ரன்கள் தேவைப்பட, இந்த இணை அதிரடி ஆட்டத்துக்கு மாறியது. பவன் நெகி வீசிய 15-வது ஓவரில் ராணா 14 ரன்களை சேர்க்க, பின்னர் சாஹல் வீசிய 16-வது ஓவரில் 37 ரன்கள் எடுத்து ராணா ஆட்டமிழந்ததால் போட்டியில் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் கொல்கத்தா அணியின் நம்பிக்கை நட்சத்திரம் ரஸல் களமிறங்கினார். கொல்கத்தா அணியின் வெற்றிக்கு 22 பந்துகளில் 64 ரன்கள் தேவைப்பட்டது. 17-வது ஓவரில் ஒரு பவுண்டரி, ஒரு சிக்ஸர் அடித்து 13 ரன்கள் எடுத்த நிலையில், கேப்டன் தினேஷ் கார்த்திக் 19 ரன்களில் ஆட்டமிழக்க, ஆட்டம் பரபரப்பின் எல்லைக்கே சென்றது.
18-வது ஓவரை வீசிய சிராஜ், முதல் இரண்டு பந்துகளில் ரன் ஏதும் கொடுக்கவில்லை. மூன்றாவது பந்தை பவுன்சராக வீச, வொய்டு கொடுக்கப்பட்டது. அடுத்த பந்தை நேராக ரஸலின் தலைக்கு வீச, பந்து சிக்ஸருக்கு அனுப்பப்பட்டது. அந்த பந்து நோ-பாலாக அறிவிக்கப்பட்டு சிராஜ் பந்துவீசுவதற்கு தடை விதிக்கப்பட்டது.
பின்னர் மீதியிருக்கும் நான்கு பந்துகளை வீச ஸ்டோனிஸ் அழைக்கப்பட, ரஸல் தொடர்ந்து இரண்டு சிக்ஸர்களை பறக்கவிட்டு ஆட்டத்தை கொல்கத்தா பக்கத்திற்கு கொண்டு வந்தார். அந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் எடுக்கப்பட்டது.
அடுத்த ஓவரை வீச செளதி அழைக்கப்பட, ரஸல் ஹாட்ரிக் சிக்ஸ் அடித்து பெங்களூரு ரசிகர்களுக்கு கண்ணீரை வரவழைத்தார். அடுத்த பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க ஸ்கோர் சமமானது. கடைசி ஓவரில் கொல்கத்தா வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட, முதல் பந்தில் ஒரு ரன் அடித்து கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
காட்டடி அடித்த ரஸல் 13 பந்துகளில் 48 ரன்கள் அடித்து கொல்கத்தாவை வெற்றிபெறச் செய்தார். இறுதியாக கொல்கத்தா அணி 19.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. இந்த ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணிக்கு கிடைத்த ஐந்தாவது தோல்வி இது என்பது குறிப்பிடத்தக்கது.