இன்று 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மாலை 4 மணிக்கு நடைபெறவிருக்கும் பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையிலான போட்டி முடிவடைந்த பின், இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் தொடங்கவுள்ள போட்டியில், ரஹானே தலைமையிலான ராஜஸ்தான் அணி, தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணியை எதிர்கொள்கிறது.
இந்தத் தொடரில், கொல்கத்தா அணி விளையாடிய நான்கு போட்டிகளில் மூன்று வெற்றி, ஒரு தோல்வியை பெற்று புள்ளிப்பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளது. தோல்வி அடைய வேண்டிய போட்டிகளிலும் ரஸல் என்கிற 'காட்டடி பேட்ஸ்மேன்' அந்த அணியை வெற்றிபெறச் செய்துள்ளார்.
மறுமுனையில், மூன்று தொடர் தோல்விகளை தழுவிய ராஜஸ்தான் அணி, பெங்களூரு அணிக்கு எதிராக வெற்றிபெற்றதன் மூலம் புத்துணர்ச்சியை பெற்றுள்ளது. பட்லர், ஸ்டீவ் ஸ்மித், சாம்சன், போன்ற திறமையான பேட்ஸ்மேன்கள் ராஜஸ்தான் அணியில் உள்ளனர். கடந்த போட்டியில் கோலி, டி வில்லியர்ஸை ஆட்டமிழக்கச் செய்த ஸ்ரேயாஸ் கோபால் இம்முறை ரஸலை அவுட் செய்வாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.