ராஜஸ்தான் ராயல்ஸ் - டெல்லி கேபிட்டல்ஸ் அணிகளுக்கு இடையிலான 12ஆவது ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 40ஆவது லீக் போட்டி ஜெய்பூரில் நடைபெற்றது. இதில், டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணியில் ரஹானேவின் அசத்தலான சதத்தால் அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 191 ரன்களை குவித்தது.
இதைத்தொடர்ந்து, 192 ரன் இலக்குடன் ஆடிய டெல்லி அணியில், ஷிகர் தவான், பிரித்விஷா ஆகியோர் அணிக்கு நல்ல தொடக்கத்தை தந்தனர். இவ்விரு வீரர்களும் முதல் விக்கெட்டுக்கு 72 ரன்களை சேர்த்த நிலையில், ஷிகர் தவான் 54 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 27 பந்துகளை மட்டும் எதிர்கொண்ட அவர் 8 பவுண்டரி, 2 சிக்சர்களை விளாசினார்.
அவரைத் தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 4 ரன்களில் ஆட்டமிழக்க பிரித்விஷா உடன் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ரிஷப் பந்த் அதிரடியான பேட்டிங்கை வெளிபடுத்தி அரைசதம் விளாசினார். இதையடுத்து, 39 பந்துகளில் 42 ரன்கள் அடித்திருந்த பிரித்விஷா ஆட்டமிழந்தார்.
பின்னர் வந்த ரூதர்ஃபோர்டு 11 ரன்களில் அவுட் ஆனதும், டெல்லி அணியின் வெற்றிக்கு கடைசி இரண்டு ஓவர்களில் 17 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ராஜஸ்தான் வீரர் ஜோஃப்ரே ஆர்ச்சர் வீசிய 19 ஆவது ஓவரில் ரிஷப் பந்த் 11 ரன்களை சேர்த்தார். இதனால், கடைசி ஓவரில் 7 ரன்கள் என்ற நிலையில், அந்த ஓவரின் முதல் பந்தை காலின் இங்கிரம் ஒரு ரன் அடிக்க, அடுத்த பந்தை எதிர்கொண்ட ரிஷப் பந்த் சிக்சர் அடித்த ஆட்டத்தை முடித்தார்.
இதனால், டெல்லி அணி 19.2 ஓவர்களில் நான்கு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 192 ரன்களை குவித்தது. இதன் மூலம் டெல்லி அணி புள்ளி பட்டியலில் 12 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.